Breaking News

பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் உரிய விசாரணை செய்து குற்றவாளியை கைது செய்ய கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் கிராமத்தில் பஜில் முகமது(61) மர்ஜானா பேகம்(54) ஆகிய தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில்  அனைவரும் வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். 

இதனிடையே கடந்த 20ம் தேதி மயிலாடுதுறையில் புதிய வீட்டின் கட்டுமான பணிகளை பார்வையிடுவதற்காக பஜில்முகமது சென்று விட்டு மாலை வீடு திரும்பிய போது  வீட்டில் தனியாக இருந்த மர்ஜானா பேகம் முகத்தில் லேசான காயங்களுடன்  மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த 14 பவுன் எடையுள்ள வளையல், செயின் மற்றும் ரூ 50 ஆயிரம் பணம் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பொறையார் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து பஜில் முகமது மற்றும் வீட்டுப் பணிப்பெண் நதியா (40) ஆகியோரிடம் விசாரணை நடத்தி பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் மர்ஜானா பேகம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் ,  காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இறந்த பெண்மணியின் உறவினர்கள் , ஜமாத்தார்கள் மற்றும் தமுமுக, மமக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் சங்கரன்பந்தல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த சீர்காழி டிஎஸ்பி ராஜ்குமார், பொறையார் காவல் ஆய்வாளர் ஜெயந்தி  போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்த நிலையில் போராட்டக்காரர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். 

No comments

Copying is disabled on this page!