Breaking News

புதுச்சேரி சிறுமி பாலியல் படுகொலை வழக்கில் சிறையில் உள்ள முக்கிய குற்றவாளி முதியவர் விவேகானந்தன் தற்கொலை.


புதுச்சேரி சிறுமி பாலியல் படுகொலை வழக்கில் சிறையில் உள்ள முக்கிய குற்றவாளி முதியவர் விவேகானந்தன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


புதுவை முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன் (59), கருணாஸ் (19) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக 500 பக்கம் குற்ற பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மேலும், புதுச்சேரியில் முதல்முறையாக குற்றவாளிகளின் பாதுகாப்பு கருதி இணைய வழி மூலமாக விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு முதல் முறையாக குற்றவாளிகளான இருவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நிலையில் நாளை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், சிறையில் உள்ள முக்கிய குற்றவாளியான முதியவர் விவேகானந்தன் (59) துண்டை பயன்படுத்தி கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக சிறைத்துறை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி

No comments

Copying is disabled on this page!