Breaking News

சீர்காழியில் திடீர் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதி. களத்தில் இறங்கிய டிஎஸ்பி அதிரடி சீரமைப்பு


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புதிய பேருந்து நிலையம் மேம்பாட்டு பணி ரூபாய் 8 கோடி 42 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி பணிகள் நிறைவடைந்து மறுபுறம் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் தொடங்கி 9 மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் நாள்தோறும் பேருந்து நிலையம் பகுதி மற்றும் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. 


பேருந்து நிலையத்தில் ஒரு பகுதி மட்டுமே பேருந்துகள் வந்து செல்ல பயன்படுத்தப்பட்டு வருவதால் நாள் தோறும் சுமார் 350 க்கு மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்லும் நிலையில் பேருந்துகள் வெளியேறும் போது பிரதான சாலையில் வரும் வாகனங்களாலும் பேருந்துகளாலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அதன்படி இன்று முகூர்த்த நாள் என்பதால் அதிக அளவு வாகன ஓட்டிகள் பொதுமக்கள் வந்து சென்ற நிலையில் பேருந்து நிலையத்திற்கு சென்று வந்த பேருந்துகள், பேருந்து நிலையத்திற்குள் செல்ல முற்பட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


இதனால் காவல் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் அமைந்துள்ள கச்சேரி சாலையில் சுமார்  ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனிடைய  சீர்காழி பகுதியில் இயல்பை விட அதிக வெயில் வாட்டி வதைத்த நிலையில்   வாகன ஓட்டிகள் வெகு நேரம் வெயிலில் போக்குவரத்தில் சிக்கி வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் அவதி அடைந்தனர். 


உச்சி வெயிலில்  போக்குவரத்து சீரமைக்க போலீசார் யாரும் இல்லாத நிலையில் அவ்வழியாக வந்த சீர்காழி காவல்துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் போக்குவரத்து  நெருக்கடியில் சிக்கி வாகனங்கள் நீண்ட தூரம் நின்று கொண்டிருந்ததை பார்த்து உடனடியாக தனது வாகனத்தில் இருந்து இறங்கி  தாமே தனி ஆளாக போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டார். அதன் பின்னர் சுமார் 20 நிமிடங்கள் அவரது முயற்சியால் போக்குவரத்து சீரான நிலைக்கு வந்தது.


சீர்காழி காவல் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறையால் இது போன்ற நெருக்கடியான பிரச்சனைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  களத்தில் இறங்கி களப்பணி ஆற்றிய டி எஸ் பி க்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

No comments

Copying is disabled on this page!