Breaking News

பொன்னேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை மாற்றும் இணைப்பு பெட்டியில் இருந்த போல்ட் கழற்றப்பட்டுள்ளது - போலீசார் விசாரணை .


சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் கல்வி, வேலை, மருத்துவம், வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக புறநகர் ரயிலில் பயணித்து வருகின்றனர். புறநகர் பயணிகள் மட்டுமின்றி வடமாநிலங்களை இணைக்க கூடிய பிரதான மார்க்கமாக உள்ள இந்த மார்க்கத்தில் தான் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்று வருகின்றன. 

இன்று காலை பொன்னேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை மாற்றும் இணைப்பு பெட்டியில் இருந்த போல்ட் கழற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் சிக்னல் இணைப்பு துண்டிக்கப்பட்டு ரயில் நிலையத்தில் வாகனங்களுக்கு சிக்னல் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அதிகாலையில் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது சிக்னல் பெட்டியுடன் தண்டவாளங்களை இணைக்கக்கூடிய பெட்டியில் போல்ட்டுகள் கழற்றப்பட்டுள்ளன. இதனை அடுத்து ரயில்வே ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு கழற்றப்பட்டு இருந்த போல்டுகளை இணைத்தனர். 

இதன் காரணமாக சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லக்கூடிய ரயில்கள் என இரு மார்க்கத்திலும் சுமார் 2 மணி நேரம் ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.  இதே போல பொன்னேரி ரயில் நிலையம் அருகே கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தண்டவாள கம்பிகளை தரையில் உள்ள கான்கிரீட் கற்களுடன் இணைக்கும் 95 இணைப்பு கம்பிகள் கழற்றப்பட்டு கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

இதனை கண்ட ரயில்வே ஊழியர்கள் உடனடியாக ரயிலை நிறுத்தி இணைப்பு கம்பிகளை பொறுத்தி ரயிலை இயக்கினர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்திருந்த சூழலில் இன்று மீண்டும் பொன்னேரி ரயில் நிலையம் அருகே இதேபோன்று தண்டவாளத்தை சிக்னல் பெட்டியுடன் இணைக்கும் போல்டுகள் அவிழ்க்கப்பட்டு ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளன. வடமாநிலங்களை இணைக்க கூடிய பிரதான மார்க்கத்தில் ரயிலை கவிழ்ப்பதற்காக மர்ம நபர்கள் சதி செயல்களில் ஈடுபட்டார்களா அல்லது ரயில்வே ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் இந்த சம்பவம் நடைபெற்றதா என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் ரயில்வே சட்டத்தின் பிரிவில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு வேறு சம்பவங்கள் குறித்தும் இரண்டு தனிப்படைகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments

Copying is disabled on this page!