புதுச்சேரியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.5.5 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட சர்வதேச அளவிலான நீச்சல் குளம் கட்டும் பணி 2 மாதத்தில் முடிவடைந்து திறப்பு விழாவிற்கு தயாராகி உள்ளது.
புதுச்சேரியில் அரசு சார்பில் ஒரு நீச்சல் பயிற்சி குளம் கூட கிடையாது. தனியார் நீச்சல் குளங்களில் தான் நீச்சல் பயிற்சி பெறும் நிலை உள்ளது. இதனால் மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், புதிதாக நீச்சல் குளம் அமைக்க திட்டமிடப்பட்டது.நகர பகுதியில் அதற்கான போதிய நிலம் இல்லாததால், அரசுக்கு சொந்தமான கடற்கரை ஜப்பான் பூங்கா ஓரம் இருந்த நிலத்தை தனியாருக்கு கொடுத்து விட்டு, அதற்கு பதிலாக சாராதாம்பாள் நகரில் உள்ள தனியார் நிலத்தை அரசு பெற்று கொண்டது.
அந்த இடத்தில், ரூ. 5.5 கோடி மதிப்பில், நீச்சல் குளம் கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு துவங்கியது. ஒலிம்பிக் போட்டி நடத்தும் தரத்தில் 50 மீட்டர் நீளம், 25 மீட்டர் அகலம், 1.75 மீட்டர் ஆழத்துடன் நீச்சல் குளம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆண்கள், பெண்கள் என, 16 பேர் உடை மாற்றும் அறைகள், பொருள் பாதுகாப்பு அறைகள் கட்டப்பட்டு வருகிறது. தற்போது கட்டுமான பணிக்கான தொகையை அரசு விடுவித்ததால், பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பணிகள் முடிந்து ஓரிரு மாதங்களில் திறப்பு விழா நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments