புதுவையில் வீடுகளுக்கான மின் கட்டணத்தில் யூனிட் ஒன்றுக்கு 45 பைசா வரை மானியம் - அமைச்சர் நமச்சிவாயம் தகவல்.
வீடுகளுக்கு மின் கட்டண மானிய திட்டத்தினை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. யூனிட்டிற்கு 45 பைசா வரை மானியம் கிடைக்கும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பால் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு அரசு மானியம் வழங்க ஆணை பிறப்பித்துள்ளது.
மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து வீட்டு மின் நுகர்வோருக்கும் முதல் 100 யூனிட்டுகளுக்கு புதிய கட்டணமான யூனிட்டுக்கு ரூ.2.70க்கு 45 பைசா மானியம் தரப்படும். இதன் மூலம் பொதுமக்கள் வீடுகளில் பயன்படுத்தும் முதல் 0-100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணம் கடந்த ஆண்டில் செலுத்திய யூனிட் ஒன்றுக்கு ரூ.2.25 என்ற அதே கட்டணமே செலுத்த வேண்டும்.
அனைத்து வீட்டு மின் நுகர்வோரும், மாதந்தோறும் 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு அரசு மானியமாக ஒரு யூனிட்டுக்கு 40 பைசா வழங்கப்படும். இதன் மூலம், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரையிலான வீட்டு மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டுள்ள யூனிட்டுக்கு ரூ.4.00க்கு பதிலாக ரூ.3.60 மட்டுமே செலுத்தலாம். மேற்கண்ட மானியம் 16.06.2024 முதல் இந்த நிதி ஆண்டில் நடைமுறையில் இருக்கும்.
அதே நேரத்தில் 201-300 யூனிட் வரை நிர்ணயித்த கட்டணமான யூனிட்டுக்கு ரூ.6, 300 யூனிட்டுக்கு மேல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் யூனிட்டுக்கு ரூ.7.50 என்பது அப்படியே தொடரும். மேலும், தற்போது நடைமுறையில் உள்ள மாதம் 100 யூனிட் மின்சாரம் கீழே உபயோகப்படுத்தப்படும்.
எனவே, புதுவையில் வீடு உபயோகத்திற்கு மின் கட்டணம் அண்டை மாநிலங்களை விட குறைவாகவே உள்ளது” இவ்வாறு நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments