சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் கொசுக்களை அழிக்க சுகாதாரத்துறை சார்பில் மருந்து தெளிக்கும் பணி
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியில் கடந்த சில தினங்களாக கொசுக்களின் உற்பத்தி அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. தேங்கி கிடக்கும் தண்ணீர்,சாக்கடை நீர், மற்றும் கழிவு நீர் ஆகியவைகளில் கொசுக்கள் அதிகமாக இனப்பெருக்கம் செய்து வளர்ந்து வருவதால் மாலை முதல் இரவு முழுவதும் கொசுக்களால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கொசுக்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கொசுவர்த்திச் சுருள் மற்றும் திரவ நிலையில் உள்ள மருந்து பொருட்களையும் கொசு விரட்டுவதற்கு வீடுகளில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் புகை வெளியேறும் மற்றும் புகை வெளியேறாத அனைத்து வகையிலான கொசு மருந்துகளும் சுவாச கோளாறு ஏற்படுவதற்கு ஒரு காரணமாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீரிலும் வளர்ந்து கடிப்பதால் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் உருவாகின்றன. டெங்கு கொசுக்கள் பழைய டயர்கள், உடைந்த பானை ஓடுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களில் தேங்கும் மழைநீரில் முட்டையிட்டு குஞ்சுகள் பொறித்து கொசுக்களாக வெளிவந்து பகல் நேரத்திலேயே கடிப்பதால் டெங்கு காய்ச்சல் உருவாகி வருகிறது. மொத்தத்தில் அனைத்து வகையான கொசுக்களையும் ஆரம்ப நிலையிலேயே அழிக்கும் வகையில் கொள்ளிடம் வட்டார சுகாதாரத்துறை சார்பில் கொசு மருந்து தெளிக்கும் பணி கொள்ளிடம் கடை வீதியில் நேற்று துவங்கியது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தலைமையேற்று கொசு மருந்து தெளிக்கும் பணியை துவக்கி வைத்து பேசுகையில் கொசுக்கள் இனப்பெருக்கத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் கொசு மருந்து தெளிக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து தெளிப்பதுடன் கொசுக்கள் வளர்வதற்கு காரணமாக இருந்து வரும் அனைத்து பொருட்களையும் அகற்றவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.இதற்கு ஒவ்வொரு ஊராட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,சமூக ஆர்வலர்கள் உதவியாக இருந்து கொசுக்களை முற்றிலும் அழிக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். சுகாதார ஆய்வாளர்கள் லெட்சுமணன், சதீஷ்குமார்,ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத்தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
No comments