Breaking News

பொன்னேரியில் உள்ள எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.


பல்வேறு கிளைகளை கொண்டு இயங்கி வரும் எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி நிறுவனத்தின் கொடுங்கையூர் மற்றும் பொன்னேரி கிளைகளில் புரட்டாசி மாதம் தொடங்கியதை முன்னிட்டு கடந்த திங்களன்று பிரியாணி , சிக்கன் ஆகியவற்றை வாங்கி உட்கொண்ட 40க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நேற்று கொடுங்கையூரில் அமைந்துள்ள எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து செங்குன்றம் அடுத்த அலமாதியில் அமைந்துள்ள உணவு தயாரிக்கும் கிடங்கில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது உணவினை கொண்டு செல்லும் வாகனங்கள் உரிய அனுமதியின்றி இயக்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்நிலையில் பொன்னேரியில் அமைந்துள்ள ஹைதராபாத் எஸ்.எஸ். உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். உணவு பாதுகாப்பு துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். உணவகத்தில் உள்ள இறைச்சியின் தரம், உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் ஆகியவை குறித்து அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். 

கிரில் சிக்கன், சிக்கன் பால், மசாலா கலக்கப்பட்டு பொறிப்பதற்காக வைத்திருந்த சிக்கனிலும் அதன் தரம் குறித்து ஆய்வு செய்தனர். கெட்டுப்போன பிரியாணி, நூல் நூலாக சிக்கன், சமைக்கப்பட்ட பன்னீர், சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய் என உணவு பொருட்கள் தரமற்ற முறையில் கெட்டு போன நிலையில் இருந்தது உறுதியானது. இதனையடுத்து அவற்றை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குப்பை தொட்டியில் கொட்டினார். 

இதனையடுத்து தரமற்ற முறையில் உணவு பொருட்கள் கெட்டுப்போய் இருந்தது கண்டறியப்பட்டதால் பொன்னேரியில் உள்ள எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து பேசிய மாவட்ட நியமன அலுவலர் உணவகத்தில் உட்கொண்ட பொதுமக்களில் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது 2 முதல் 3 நாட்களுக்கு மேலான சிக்கன் ஆகியவை இருந்தது கண்டறியப்பட்டதாக தெரிவித்தார். 

இது போன்ற தரமற்ற சிக்கனை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்டால் கட்டாயம் வயிற்று போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும் என தெரிவித்தார். வடமாநில தொழிலாளர்கள் தகுந்த பயிற்சியின்றி உணவகங்களில் பணியாற்றி வருவதாகவும், மொழி தெரிந்த நபர்களை வேலைக்கு அமர்த்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவை எப்படி கையாள்வது,  அதன் தரத்தை எவ்வாறு சோதிப்பது என்பது போன்ற பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

மேலும் அலமாதியில் அமைந்துள்ள உணவு தயாரிக்கும் கிடங்கில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும் எனவும் சதீஷ்குமார் தெரிவித்தார். தரமற்ற உணவு பொருட்கள் குறித்து பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறையின் 9444042322 என்ற செல்போன் எண்ணில் ஃபோட்டோ, வீடியோ கொண்டும் புகார் அளிக்கலாம் எனவும் அப்போது தெரிவித்தார். பொன்னேரியில் இயங்கி வந்த பிரபல பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments

Copying is disabled on this page!