காரைக்கால் நிரவி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சியில் 40க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
காரைக்கால் மாவட்டம் நிரவி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் துணை முதல்வர் எஸ்.சித்ரா கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். சந்திரயான் -3 மாதிரிவடிவம், வீட்டிற்குமேல் செல்லும் மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து உருகாமல் இருக்க நெகிழி சாப்பு, பூகம்ப எச்சரிக்கைக்கருவி, அதிக மழை எச்சரிக்கைக் கருவி, பஞ்சுமிட்டாய் செய்யும் இயந்திர மாதிரி, வீணாகும் பொருட்களைக் கொண்டு உபயோகமான பொருட்கள், பல்வேறு இயக்க நிலைகளின் மாதரிகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்தனர்.
தந்தைபெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியின் விலங்கியல் விரிவுரையாளர் என்.முத்துசாமி மற்றும் திருபட்டினம் அரசுமேல் நிலைப்பள்ளியான் தாவரவியல் விரிவுரையாளர் எம்.லஷ்மிதேவி ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டு பரிசுக்குரிய மூன்று அறிவியல் படைப்புகளை தேர்வு செய்தனர். கண்காட்சியைப் பார்வையிட்டு ஆசிரியர்களும் மாணவர்களும் அறிவியல் படைப்புகளை செய்திருந்த மாணவர்களிடம் விளக்கங்களைக் கேட்டறிந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர் ஆர்.மேத்யூ செய்திருந்தார்.
No comments