சீர்காழி நகரப் பகுதி முழுவதும் மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின் இரவு திடீரென அதிரடி ரோந்து சென்று, வாகனப் போக்குவரத்தை சீரமைத்திட ஒலிபெருக்கியில் அறிவுறுத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பிரதான வீதிகளான கடைவீதி, கொள்ளிட முக்கூட்டு, பிடாரி வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம், தென்பாதி, கச்சேரி சாலை, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் வருகை அதிக அளவு இருக்கும். இவ்வாறு வணிக கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலைகளில் நிறுத்துவதால் பிரதான சாலைகளில் போக்குவரத்து இடையூறும் நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது. இதனை கண்காணித்து தடுக்க சீர்காழி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ரோந்து வருவது வழக்கம்.
இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக திங்கட்கிழமை இரவு சீர்காழி பகுதிக்கு மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகரில் உள்ள பிரதான வீதிகள் மற்றும் அனைத்து வீதிகளிலும் எஸ்.பி. ஸ்டாலின் தனது வாகனத்தில் அதி விரைவு படை போலீஸார் ரோந்து சென்றார். சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்து எடுக்க அறிவுறுத்தினார்.
அதேபோல் சாலைகளில் ஆங்காங்கே பொதுமக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்களையும் கலைந்து போக சொல்லி ஒலிபெருக்கியில் அறிவுறுத்தினார். சீர்காழி பகுதியில் இவ்வாறு எஸ்.பி ரோந்து போக்குவரத்தை சீரமைத்தது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது.
No comments