ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்ற வாலிபரை மீட்டு அவரது இல்லத்தில் ஒப்படைத்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். தன்னைப்போல் யாரும் ஆன்லைன் விளம்பரத்தை நம்பி ஏமாற வேண்டாம் என வாலிபர் வேண்டுகோள்.
இந்த நிலையில் முத்துக்குமாரை மீட்டு தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது மனைவி சுந்தரி மூன்று வயது பெண் குழந்தையுடன் மனு அளித்தார். இதையடுத்து முத்துக்குமாரை மீட்பதற்காக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் முத்துக்குமார் பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர் தாய்லாந்து நாட்டில் இருந்து மீட்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் வெள்ளூரில் உள்ள முத்துக்குமாரின் வீட்டில் அவரை ஒப்படைப்பதற்காக வருகை தந்தனர். பாஜக மாவட்டத்தலைவர் சித்ராங்கதன் காரில் முத்துக்குமார் அழைத்து வரப்பட்டார். அவரை பார்த்த ஊர்மக்கள் மகிழ்ச்சியில் முத்துக்குமாரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
வீட்டில் இருந்து வந்த முத்துக்குமாரின் தந்தை முத்துக்குமாரை கட்டிணைத்து முத்தமிட்டார். அதன்பின்னால் வந்த மனைவி சுந்தரி முத்துக்குமாரை பார்த்து கண்கலங்கினார். தனது மகளை கையில் தூக்கி முத்துக்குமார் கொஞ்சினார்.
அதைத் தொடர்ந்து அங்கு வருகை தந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு அப்பகுதி பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். உங்கள் மகனை உங்களிடம் ஒப்படைத்து விட்டோம் என்று முத்துக்குமாரின் தந்தையிடம் எல்.முருகன் கூறினார். எல்.முருகனுக்கு நன்றி கூறிய முத்துக்குமாரின் தந்தை பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் அனைவரும் செண்டை மேளங்கள் முழங்க பட்டாசு வெடித்து, ஊர்வலமாக முத்துக்குமாரை அழைத்து வந்தனர். முத்துக்குமாரின் வீட்டிற்கு வந்த அவர்கள் அனைவரையும் முத்துக்குமாரின் தாயார் ஆரத்தி எடுத்து வரவேற்றார். அதன்பின்னர் வீட்டிற்குள் இருந்து அனைவரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
அதைத் தொடர்ந்து அனைவரின் முன்னிலையிலும் முத்துக்குமாரின் மாமா தனது மருமகனை மீட்டு வந்ததற்கு காரணமாக பிரதமர் மோடிக்கும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முத்துக்குமார் பேசுகையில், ஆன்லைனில் வந்த விளம்பரத்தை நம்பி நான் தாய்லாந்து நாட்டிற்கு சென்றேன். அங்கு விஐபி விசா மூலம் சென்றேன். தாய்லாந்து சென்றபின் நான் வீட்டிற்கு போனில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டு தான் இருந்தேன். அதைத் தொடர்ந்து மியான்மர் பகுதிக்கு ஒரு நதியை தாண்டி கூட்டிச் சென்றார்கள்.
அங்கு சென்ற பின்னர் என்னுடைய பாஸ்போர்ட், செல்போன் அனைத்தையும் வாங்கிக் கொண்டார்கள். அங்கு ஸ்கேம் எனப்படும் வேலை. படிப்புக்கு ஏற்ற வேலை என்று பொய் சொல்லி என்னைப்போல் ஏராளமானோரை இங்கு அழைத்து வந்துள்ளார்கள். அது ஒரு பெரிய இடம். அங்கு அனைத்தும் இருக்கும். ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அதில் அவர்கள் கொடுக்கும் டார்க்கெட்டை முடிக்கவில்லை என்றால் கடுமையான தண்டனைகள் கொடுப்பார்கள். பேட், வயர், இரும்பு போன்ற பொருட்களால் கடுமையாக அடிக்கிறார்கள். சிலருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கிறார்கள். என்னைப்போல அந்த பகுதியில் 5000க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இந்தியர்கள் யாரும் நான் இருந்த இடத்தில் இல்லை. நான் இருந்த இடத்தைப்போல் அங்கு 21 இடங்கள் இருக்கிறதாம். என்னை மீட்டுக் கொண்டு வந்த மத்திய அரசுக்கும் பிரதமர் மோடி அவர்களுக்கும், மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் எனது குடும்பத்தினர் மூலம் பேசி அந்த நாட்டில் உள்ள எம்பஸியில் எனது பெயர் தெரியும் அளவுக்கு பேசி என்னை மீட்க நடவடிக்கை எடுத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், என்னைப்போல் ஆன்லைன் விளம்பரத்தை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று தெரிவித்தார்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments