கால்வாய்களில் குப்பைகளை போடாமலும், பிளாஸ்டிக் கேரி பைகளை தவிர்த்தும் பொதுமக்கள் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி மில்லர்புரத்தில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் முகாமிற்கு மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமை வகித்தார். துணை மேயர் ஜெனிட்டா, மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முகாமில் வருவாய்த்துறை, பொறியியல் துறை, சுகாதாரத்துறை, சொத்துவரி, குடிநீர் இணைப்பு, கட்டட அனுமதி உள்ளிட்ட 48 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களில் சொத்துரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் என இரண்டு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
பின்னர் மேயர் பேசுகையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க மாநகராட்சியில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்பட்டு அதில் சில மனுக்களுக்கு உடனடியாக ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படுகிறது.
மேலும், மாநகராட்சியில் புதிய சாலைகள் அமைத்தல், பிரதான சாலைகளை அகலப்படுத்துல், டவுண்டாக்களை சீரமைத்து மின் விளக்குகள், செயற்கை நீரூற்றுகள் அமைத்து மாநகராட்சியை அழகுப்படுத்தும் விதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சாலைகளில் தேங்கியுள்ள மணல், தூசிகளை அகற்றுதல், என்ட் டூ என்ட் சாலைகள் அமைத்தல் போன்ற பணிகளால் மாநகர பகுதிகளில் காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது.
அதற்கு சான்றாக தூத்துக்குடியில் காற்று மாசு 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மேலுமட், வடகிழக்கு பருவமழையில் மாநகரில் மழை வெள்ளம் தேங்காத வகையில் மாநகராட்சி சார்பில் அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. இருப்பினும், கால்வாய்களில் குப்பைகளை போடாமலும், பிளாஸ்டிக் கேரி பைகளை தவிர்த்தும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க கேட்டு கொள்கிறேன் என்றார்.
முகாமில், மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம், மேற்கு மண்டல உதவி ஆணையர் மகேந்திரன், தெற்கு மண்டல உதவி ஆணையர் பிரபாகரன், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், இளநிலை பொறியாளர் சேகர், நகர்நல அலுவலர் வினோத்ராஜா, திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, கவுன்சிலர்கள் பொன்னப்பன், இசக்கிராஜா, சந்திரபோஸ், விஜயலட்சுமி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments