தூத்துக்குடியில் ரேசன் கடையில், ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை
தூத்துக்குடி திரவியபுரம் 5வது தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (46). இவர் தூத்துக்குடி முனியசாமிபுரத்தில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடை விடுமுறை. இருப்பினும் கடைக்கு ரேசன் பொருட்கள் இறக்குவதற்காக லாரி வருவதாக ராமகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால் ராமகிருஷ்ணன் ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது, சிறிது நேரம் கழித்து ரேசன் கடைக்கு பொருட்களுடன் லாரி வந்துள்ளது.
பொருட்களை இறக்குவதற்காக லோடுமேன் ஒருவர் கடையின் உள்ளே சென்றபோது, அங்குள்ள மின் விசிறியில் ராமகிருஷ்ணன் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக, தென்பாகம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தான் பணிபுரியும் கடையிலேயே தூக்கிட்டு கொண்ட ராமகிருஷ்ணன், குடும்ப பிரச்சினையில் இறந்தாரா? அல்லது பணிச் சுமை காரணமாக இறந்தாரா? அல்லது வேறேதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments