புதுச்சேரி சுற்றுசூழல் துறை அதிகாரி லஞ்சம் பெறும்போது, சி.பி.ஐ அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாசுக்கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறையில் அறிவியல் துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் சீனிவாச ராவ். இவர் ரெட்டியார்பாளையம் ஜெயா நகரில் வசித்து வருகிறார். இந்த சூழலில் தொழிற்சாலைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் இவர் லஞ்சம் பெறுவதாக சி.பி.ஐ அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது.
அதன்பேரில் அவரை தொடர்ந்து கண்காணித்து சி.பி.ஐ அதிகாரிகள் வந்தனர். அதன்படி இன்று காலை ஒரு தொழிற்சாலையை சேர்ந்த ஒருவர் சீனிவாசராவை சந்தித்துள்ளார். அப்போது அந்த நபர், சீனிவாசராவிற்கு லஞ்சம் கொடுக்க முயன்றபோது, அவருடன் சென்ற சி.பி.ஐ அதிகாரிகள் சீனிவாசராவை அவரது வீட்டில் வைத்து கையும் களவுமாக பிடித்தனர்.
இதனை தொடர்ந்து அண்ணா நகர் வீட்டு வசதி வாரியம் கட்டிடத்தில் இயங்கி வரும் மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் அலுவலகத்திற்கு சீனிவாசராவை அழைத்து வந்து, சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
புதுச்சேரி சுற்றுசூழல் துறை அதிகாரி லஞ்சம் பெறுவதாக கிடைக்கபெற்ற தகவலின்பேரில், சி.பி.ஐ அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments