Breaking News

புதுச்சேரி அ.இ.அ.தி.மு.க மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை.


புதுச்சேரி அ.இ.அ.தி.மு.க மாநில கழக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் Ex.Mla., வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், புதுச்சேரியை ஆளும் மாண்புமிகு முதலமைச்சர் கடந்த 2021ம் ஆண்டு சட்டசபையில் பட்ஜெட் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசினார். 

அப்போது, ஆதிதிராவிடர் வரைநிலை மேம்பாட்டுக்கழகம், பிற்படுத்தப்பட்டோர் கழகம் மூலம் மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், சென்டாக் மூலம் சேர்க்கை பெறும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்று இலவச கல்வி அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். மேன்மை பொருந்திய சட்டசபையில் மாண்புமிகு சபாநாயகர் முன்னிலையில், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்களின் முன்பு, முதலமைச்சர் சட்டசபையில் ஒரு அறிவிப்பு வெளியிடுவது பொழுதுபோக்கான விஷயமல்ல. சட்டசபையில் முதலமைச்சர் அறிவித்த அறிவிப்பால் கல்வி கடன் பெற்று படித்த பல இளைஞர்கள் நிம்மதியடைந்திருந்தனர். 

புதுச்சேரியில் கடன் பெற்று படித்து முடித்திருந்தாலும், வேலைவாய்ப்பை அரசு உருவாக்கவில்லை. இதனால் சொற்ப சம்பளத்தில் வெளிமாநிலங்களில் கொத்தடிமைகளாக புதுச்சேரி மாநில இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே கடன் பெற்று படித்த மாணவர்களுக்கு முதலமைச்சரின் அறிவிப்பு நெஞ்சில் பாலை வார்ப்பது போல இருந்தது. ஆனால் வழக்கம்போல முதலமைச்சர் வெற்று வாய்ஜால வார்த்தைகளைத்தான் உறுதிமொழியாக அளித்துள்ளார் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 

முதலமைச்சர் அறிவித்து 3 ஆண்டுகளை கடந்தும் மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு அரசு அறிவித்தபடி கல்வி உதவித்தொகையும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் கல்விக்காக பெற்ற கடனை உடனடியாக வட்டியுடன் செலுத்த வேண்டும் என அரசின் கழகங்கள் சார்பில் மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இது புதுச்சேரி மாநில மாணவர்கள் நெஞ்சில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது. வாய் கூசாமல் பொய்களை அள்ளி வீசுவதால் மட்டும் காமராஜர் ஆட்சி நடக்கிறது என தம்பட்டம் அடித்துக்கொள்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. 

ஒரு சொல், ஒரு செயல் என அளிக்கும் வாக்கினில் தெளிவும் வேண்டும். முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்தபடி ஆதிதிராவிடர் மேம்பாட்டுக்கழகம், பிற்படுத்தப்பட்டோர் கழகம் மூலம் மாணவர்கள் பெற்ற கல்விக்கடனை உடனடியாக ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும். சமூகநீதி என கூக்குரலிடும் இந்தியா கூட்டணி கட்சியினர் இவ்விஷயத்தில் தொடர்ந்து கள்ள மவுனம் சாதிப்பது ஏன்? முதலமைச்சருடன் உள்ள கள்ள உறவை காப்பாற்றிக்கொள்ள, இந்தியா கூட்டணி கட்சியினர் புதுச்சேரி மாணவர்களையும், பெற்றோர்களையும் வஞ்சிக்கிறார்களா? இந்தியா கூட்டணி கட்சியினரின் கபடநாடகம், இரட்டை வேடத்தை புதுச்சேரி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மேன்மை பொருந்திய சட்டசபையில் போலி அறிவிப்புகளை வெளியிட்டு, புதுச்சேரி மாநில மாணவர்களையும், பெற்றோர்களையும், மக்களையும் ஏமாற்றி வரும் மாண்புமிகு முதலமைச்சர் மீது இந்திய அரசியலமைப்பு சட்டம் 420ன் கீழ் மோசடி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Copying is disabled on this page!