மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.
மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் இன்று காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணிவரை நடைபெற்றது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்த தனியார் நிறுவனங்கள் உட்பட 90-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டன. இம்முகாமில் 18 வயது முதல் 35 வரை உள்ள 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் என மொத்தம் 1400-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்களில் (மாற்றுத்திறனாளிகள்) உட்பட 250-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. 350-க்கும் மேற்பட்ட நபர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கும், 60-க்கும் மேற்பட்ட நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஷ்வரி சங்கர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல், மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மயிலாடுதுறை நகர்மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், நகர்மன்ற குழு உறுப்பினர் கீதா, கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், குத்தாலம் ஒன்றியகுழு தலைவர் மகேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சுரேஷ், குமாரசாமி, மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் குணசேகர், ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments