தனியார் பள்ளிகளில் ஆதி திராவிட மாணவர்களிடம் கட்டணம் கேட்டு துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
தனியார் பள்ளிகளில் ஆதி திராவிட மாணவர்களிடம் கட்டணம் கேட்டு துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் 1964 குடியுரிமை உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு முழு கட்டணத்தை ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கி வருகிறது. இதேபோல் அதற்கு பின் வந்தவர்களுக்கு 11 வகையான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு அந்தந்த பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சரியான புரிதல் இல்லை. இதனால் மாணவ மாணவிகள் மத்திய அரசு உதவி தொகையை பெற முடியாமல் போகிறது.
இந்த நிலையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கல்வித்துறை வளாகத்தில் நடைபெற்றது. ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், ஆதி திராவிடர் நலத்துறை மூலம் பள்ளிகளுக்கு கட்டணம் காலதாமதம் இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. எனது தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆதி திராவிடர் மாணவர்களிடம் கல்வி கட்டணம் கேட்டு துன்புறுத்த கூடாது. அவர்களை தனியாக நிறுத்த கூடாது என்றும் எதுவாக இருந்தாலும் அவர்களது பெற்றோர்களை அழைத்து தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அரசு உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
No comments