Breaking News

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீட்கப்படும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த பூம்புகார் மீனவர்கள்.


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37  மீனவர்கள். இந்திய எல்லையிலேயே மீன் பிடித்ததாக தப்பி வந்த மீனவர்கள் தகவல். மீனவர்கள் மீட்கப்படும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த பூம்புகார் மீனவர்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த  பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த  செல்லத்துரை என்பவருக்கு சொந்தமான  விசைப்படகு மற்றும் நான்கு பைபர் படகுகளில் கடந்த 20 ஆம் தேதி இரவு 43 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். பூம்புகார் துறைமுகத்தில் இருந்து சென்ற இவர்கள் நேற்று காலை கரை திரும்ப வேண்டும். ஆனால் மாலை வரை மீனவர்கள் கரைதிரும்பாததாலும் மீனவர்களிடம் இருந்து எந்த தகவலும் வராததாலும் மீனவ கிராமங்களில் அச்சம் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்த போது மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றதாக தெரியவந்தது. அதனை தொடர்ந்து தகவல் அறிந்த மீன்வளத்துறை பணி மேற்பார்வையாளர்கள் தீனதயாளன் மற்றும் வாசன் ஆகியோர் சம்பவம் குறித்து பூம்புகார் துறைமுகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது 1 விசை படகு மற்றும் 2 பைபர் படகுகளில் இருந்த மயிலாடுதுறை மாவட்டம்  பூம்புகார் மீனவ கிராமத்தை சேர்ந்த 21 மீனவர்கள், சின்ன மேடு கிராமத்தை  சேர்ந்த 3 மீனவர்கள்  மற்றும் சந்திரபாடி கிராமத்தை சேர்ந்த 13 பேர் ஆகிய 37 மீனவர்களையும் இலங்கை கடற்டை கைது செய்தது தெரியவந்தது. மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்ப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் எஞ்சிய இரண்டு படகுகளில் 6 மீனவர்கள் தப்பி இன்று காலை பூம்புகார் துறைமுகம் வந்தடைந்தனர். தப்பி வந்த மீனவர்கள் கூறுகையில் இந்திய கடற்பரப்பிலேயே நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். போது அங்கே இலங்கை மீனவரின் உடல் மிதந்துள்ளது. இதுகுறித்து வாக்கி டாக்கியில் தகவல் தெரிவித்த போது  உடலை தேடி வந்த இலங்கை மீனவர்கள் சற்று நேரத்தில் வந்து விடுகிறோம் அதுவரை அந்த இடத்திலேயே இருங்கள் என கேட்டுக்கொண்டனர்.

அதன்படி சற்று நேரத்தில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள் இறந்த சக மீனவரின் சடத்தை மீட்டனர். அப்போது அவ்வழியே வந்த இலங்கை கடற்படை பூம்புகார் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக 1 விசை படகு மற்றும் 2 பைபர் படகுடன் கைது செய்ததாகவும். துரிதமாக படகை திருப்பி அங்கிருந்து இரண்டு படகுகளில் இருந்த தாங்கள் 6 பேர் தப்பிவந்தவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

கடற்கரையில் காத்திருக்கும் மீனவர்களின் உறவினர்கள் அனைத்து மீனவர்களையும் படகையும் பாதுகாப்பாக மீட்டுதர கண்ணீர்மல்க மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகை மீட்டுத் தரும் வரை பூம்புகார் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர் இதன் காரணமாக 75 விசைப்படகு 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments

Copying is disabled on this page!