Breaking News

நிலக்கடலை பயிர்களை சேதப்படுத்தி வரும் மயில்கள் செய்வதறியாமல் தவிக்கும் விவசாயிகள்.


நிலக்கடலை பயிர்களை சேதப்படுத்தி வரும்  மயில்கள் செய்வதறியாமல் தவிக்கும் விவசாயிகள். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மயில்களிடமிருந்து பயிர்களை காக்க உரிய ஆலோசனை வழங்க வேண்டுமென கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மயில்களை காண்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. 
மயில்களை புகைப்படத்தில் மட்டுமே பார்த்து வந்த மக்கள் அவ்வப்போது ஒரு சில கோயில்களிலும் அடர்ந்த காடு பகுதிகளிலும் பார்க்க நேரிட்டால் மயில்களை பார்த்த உற்சாகத்தில் துள்ளி குதித்து உற்சாக குரல் எழுப்பி மகிழ்ந்து வந்த காலம் மாறி தற்போது மயில்களின் பெருக்கம் அதிகரித்து காக்கை குருவிகள் போல கிராமம் தோறும் பல நூற்றுக்கணக்கான மயில்கள் சுற்றி திரிகின்றன. 

மயில்கள் பரவத் தொடங்கிய காலத்தில் கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சுற்றி திரிந்ததால் பெரிய அளவில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை ஆனால் கடந்த சில வருடங்களில் மயிலின் கூட்டம் அபரிவிதமாக பெருகி
காக்கை குருவிகளைக் காட்டிலும் அதிக அளவு மயில்கள் சுற்றித் திரிகின்றன முன்பெல்லாம் நரிகள் அதிகமாக இருந்ததால் மயில்கள் இடும் முட்டையை தின்றுவிடும் ஆனால் தற்போது நரிகள் இருக்கின்றதா இல்லையா என்பதை தெரியாத நிலை உள்ளதால்  மயில்களின் பெருக்கம் அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது. 

தரங்கம்பாடி தாலுகாவில் சிங்கனோடை, அனந்தமங்கலம், ஆனைகோயில் காழியப்பநல்லூர், கண்ணப்பன்மூளை ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேலாக விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்றனர் குளங்களில் கிடைக்கும் நீரைக் கொண்டு ஸ்பிரிங்லர் முறைப்படி கடும் சிரமத்துக்கு மத்தியில் வருடத்திற்கு மூன்று போகமும் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இந்த மயில்கள் தற்போது மிகவும் சவாலாக உள்ளது. 

அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் கூட்டம் கூட்டமாக வரும் மயில்கள் மண்ணுக்கு அடியில் உள்ள நிலக்கடலை பிஞ்சுகளை   கொத்தி தின்று அதிக அளவு சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். பட்டாசு வெடித்தாலும் சத்தம் எழுப்பினாலும் மயில்கள் கண்டுகொள்ளாமல் பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே மயில்களால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மயில்களிடமிருந்து பயிர்களை காக்க உரிய ஆலோசனை வழங்க வேண்டும், வனத்துறை சார்பில் மயில்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Copying is disabled on this page!