மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் .ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தபோது. வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள தேவையான முன்னெற்பாடு நடவடிக்கைகளை அனைத்து துறைகளும் மேற்கொள்ள வேண்டும். அதன்படி நீர்வளத்துறையினர் நீர்நிலைகள், வாய்க்கால்கள் மற்றும் நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆறுகள், குளங்கள், நீர் செல்லும் கால்வாய் கரைகளை சரிப்படுத்திடவும், கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை உடனடியாக அடைப்பதற்கு போதுமான மணல் மூட்டைகள் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மழைகாலங்களில் பொதுமக்கள் தங்கக்கூடிய நிவாரண மையங்களான பள்ளிகளின் கட்டிடங்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்தும், ஆபத்தான கட்டிடங்களை உடனடியாக அகற்றவும்,கட்டிடங்களில் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.சுகாதாரத்துறையினர் மழைகாலத்திற்கு தேவையான மருந்துகளை தமிழ்நாடு மருத்துவப்பணி கழகத்திலிருந்து பெற்று இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையினர் ஜே.சி.பி,மரம் அறுக்கும் கருவி போன்ற கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்கு வேண்டும். சாலை ஓரங்களில் நீர் செல்லும் வழிகளில் அடைப்புகள் இல்லாதவாறும் தண்ணீர் விரைந்து செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாலையில் மரங்கள் சாய்ந்தால் அதனை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீன்வளத்துறையினர் மழை,வெள்ள காலங்களில் படகுகள்,கட்டுமரம் மற்றும் படகு இயக்குபவர்கள்,நீச்சல் வீரர்கள் ஆகியோர்களை அவசர காலத்தில் பயன்படுத்திட ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை தகவல்களை தெரிவித்திட வேண்டும். அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியவாசிய பொருட்கள் தேவையான அளவு வைத்திட வேண்டும்.தீயணைப்பு படையினர் மீட்பு பணிக்கு தேவைப்படும் ரப்பர் படகுகள், மிதவை படகுகள் ஆகியவற்றை போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திருக்கு வேண்டும்.கால்நடை பராமரிப்புத்துறையினர் மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்திட வேண்டும்.மேலும் தேவையான மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும்.வருவாய்த்துறையினர் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்.தாழ்வான பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்த அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
முதல்நிலை மீட்பாளர்களை கொண்டு பொதுமக்களுக்கு பேரிடர் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.கடந்த காலங்களில் பெறப்பட்ட அனுபவங்களை மனதிற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்.ஏ.பி.மகாபாரதி தெரிவித்தார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் மு.ஷபீர் ஆலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது).முத்துவடிவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) .சொக்கநாதன் இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்.
No comments