தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் புதிய சர்வதேச சரக்கு பெட்டக முனையம்: மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நாட்டுக்கு அர்ப்பணித்தார்!
தொடர்ந்து, எண்ணெய் கையாளும் தளத்தில் உள்ள மின் கட்டுப்பாட்டு அறை மற்றும் சிவப்பு நுழைவாயிலில் 22 கி.வாட் மின்சுற்று தடுப்பான் மேம்படுத்தல், 24 உயர் கோபுர மின் விளக்கு கம்பங்கள் அமைத்தல், ட்ரோன் கண்காணிப்பு மையம், மருந்தகம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கிவைத்தார். பசுமை ஹைட்ரஜன் முனையம், 400கி.வாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின் நிலையம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், நில ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திடப்பட்டன. பின்னர் அவர் பேசுகையில்:
இந்தியா சர்வதேச பரிவர்த்தனை முனையமாகும் இலக்கை அடைய கடல் வாணிபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிகமான உள் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட சர்வதேச சரக்கு பெட்டக முனையம் சான்றாகும். இந்த துறைமுகத்தில் 9வது சரக்கு தளத்தில், ரூ.434 கோடி செலவில் சரக்கு பெட்டக முனையம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
வ.உ. சிதம்பரனார் துறைமுகம் ஆணையம் மற்றும் ஜெ.எம்.பாக்சி நிறுவனமும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளன. இந்த திட்டத்தோடு மேலும் ரூ.485.67 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து அமைத்துள்ள இந்த புதிய சரக்கு பெட்டக முனையத்தின் மூலமாக 6 லட்சம் சரக்கு பெட்டகங்கள் கூடுதலாக கையாளப்படும். இது நாட்டின் பொருளாதாரத்தை 5 ட்ரிலியன் அளவிற்கு உயர்த்தும் இலக்கினை அடையும் பிரதமரின் நடவடிக்கைக்கு சிறந்த பங்களிப்பை ஆற்றும். கடல் சார் வாணிபத்தை மேம்படுத்துவதன் மூலமாக வரும் 2047ம் ஆண்டு இந்தியா கடல் வாணிபத்தில் ஒரு சுய சார்பு நாடாகவும், சிறந்த பொருளாதார நாடாக மாறும் என்றார்.
இதில், மத்திய கப்பல் துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர், கனிமொழி எம்.பி., மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கப்பல் துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை செயலர் ராமச்சந்திரன், வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் சுசந்த குமார் புரோஹித், மாவட்ட கலெக்டர் இளம் பகபத், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments