கோவையில் பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்.
பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கோவையில் நடைபெற்றது. வி ஒண்டர் உமன் என்ற தன்னார்வ அமைப்பு கற்பகம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவையில் நான்காவது ஆண்டாக பெண்களுக்கு எதிரான இணைய வழி குற்றம் குறித்த 5 கி. மீ. விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை நடத்தியது.
இதுகுறித்து வீ ஒண்டர் உமன் தன்னார்வ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சுபிதா ஜஸ்டின் மற்றும் அறங்காவலர் சண்முகப்பிரியா ஆகியோர் கூறும்போது :- வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் சமூகத்தில் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக சைபர் குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெண்கள் விழிப்புடன் இருந்தாலும் சில சமயங்களில் அவர்களை அறியாமலேயே பாதிக்கப்படுகின்றனர்.
தொழில்நுட்பம் பெண்களுக்கு எதிரான இணைய குற்றங்களை மிகவும் பொதுவானதாக ஆக்குகிறது, இது உலகளவில் சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பதினைந்து வயதிலிருந்தே, பத்தில் ஒரு பெண் இணைய வன்முறைக்கு ஆளாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு எதிரான மிகவும் பொதுவான சைபர் குற்றமாகும்.
பெண்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக பெண்களை தவறான வழிகளில் கையாள்கின்றனர், பின்னர் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.சைபர் கிருமினல்கள் பொதுவாக பெண்களை குறிவைத்து, நிதி விவரங்கள், முகவரிகள் மற்றும் தனிப்பட்ட உரையாடல்கள் போன்ற அவர்களின் தனிப்பட்ட மற்றும் முக்கியமான தகவல்களை சேகரிக்கின்றார்கள்.
ஆண்களை விட பெண்கள் ஆன்லைனில் துன்புறுத்தப்படுவது 27 மடங்கு அதிகமாக உள்ளனர், இதனால் அவர்கள் இணைய குற்றவாளிகளுக்கு அடிக்கடி இலக்காகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், குற்றவாளிகள் இந்த முக்கியமான தரவுகளை அம்பலப்படுத்துவதாக அச்சுறுத்தலாம். இது பெரும்பாலும் பெண்களுக்கே நிகழ்கிறது, இதனால் அவர்களுக்கு பாதுகாப்பு ஆபத்து, உணர்ச்சி பாதிப்பு மற்றும் நிதி இழப்பு ஏற்படுகிறது.
அந்தரங்கமான படங்கள், வீடியோக்கள் பகிர்வது. இது பெரும்பாலும் பெண்களிடம் நடக்கும் இணையச் சுரண்டலின் ஒரு வடிவமாகும். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கும் நீண்டகால உளவியல் துயரத்தை அனுபவிப்பதாக அடிக்கடி தெரிவிக்கின்றனர்.
விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலமும் அனைவரும் பாதுகாப்பான ஆன்லைன் சூழலுக்கு மாறலாம். காவல் துறையினர் இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றனர். சமூகத்தில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகார் அளிக்க தயங்குகிறார்கள்.
இது போன்ற சம்பவங்களில் பெண்கள் விழிப்புடன் இருக்க ஆண்டுதோறும் வீ ஓண்டர் வுமன் தன்னார்வ அமைப்பின் சார்பில் ஃபிரீடம் ரன் என்ற பெயரில் 5 கிலோ மீட்டர் விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சுமார் 3,000 நபர்கள் முன்பதிவு செய்துள்ளார்கள். இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை சைபர் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட் சங்கர சுப்ரமணியம், வீ ஒண்டர் உமன் தன்னார்வ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சுபிதா ஜஸ்டின் மற்றும் அறங்காவலர் சண்முகப்பிரியா, கற்பகம் பல்கலைக்கழகத்தின், டீன், டாக்டர் அமுதா, கற்பகம் பொறியியல் கல்லூரியின் முதல்வர், டாக்டர் குமார் சின்னய்யா, கற்பகம் கல்வி குழுமத்தில் மக்கள் தொடர்பு அலுவலர் டாக்டர் ஆதி பாண்டியன், விஜிஎம் மருத்துவமனையின் ஸ்போர்ட்ஸ் இஞ்சூரி ஸ்பெசலிஸ்ட் டாக்டர் சுமன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த போட்டியானது கோவை நேரு ஸ்டேடியம் முன்பு துவங்கி ஏ டி டி காலனி வழியாக, மதுரை பாலிடெக்னிக் சென்று, அண்ணா சிலை வழியாக மீண்டும் நேரு ஸ்டேடியத்தை வந்தடைந்தது.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மெடல், சான்றிதழ், டீ சர்ட் மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
No comments