கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு.
இலுப்பூர் கிராமத்தில் கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு. 14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருடுபோய் உள்ளதாக கணவர் புகார் தெரிவித்ததால் கொலையா என போலீசார் தீவிர விசாரணை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்த நிலையில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் கிராமத்தில் மெயின் ரோட்டில் மனைவி மர்ஜானாபேகத்துடன் (56) வசித்து வருபவர் பஜில் முகமது(64). இவர்களுக்கு மூன்று மகன்கள் முதல் மகன் மகதீர் திருமணம் ஆகி தனியாக வசிக்கும் நிலையில் இரண்டாவது மகன் அகமது பாரீஸ், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மூன்றாவது மகன் முகமது அஜ்மல் சென்னையில் உயர்கல்வி பயின்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் பஜில் முகமது மயிலாடுதுறைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மனைவி மர்ஜானா பேகம் இறந்து கிடந்துள்ளார். அருகில் இருந்த மருத்துவரை அழைத்து வந்து பார்த்தபோது இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக மர்ஜானா பேகம் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பஜில் முகமது பொறையார் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி டிஎஸ்பி ராஜ்குமார், பொறையார் காவல் ஆய்வாளர் ஜெயந்தி விசாரணை மேற்கொண்டனர். தனது மனைவி கழுத்திலும் கையிலும் அணிந்திருந்த 14 பவுன் நகை மற்றும் பீரோவில் இருந்த 50 ஆயிரம் ரொக்க பணம் திருடு போயுள்ளதாக பஜில் முகமது தெரிவித்துள்ளார். இச்சம்பம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.
தொடர்ந்து நாகையிலிருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்பநாய் வீட்டின் அருகிலேயே சென்று வீட்டை சுற்றி வந்து அங்கேயே நின்றுவிட்டது. சோதனைகள் முடிந்து உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு இரவு 11 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து பஜில் முகமது குடும்பத்தாரிடமும் அப்பகுதியில் உள்ளவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மர்ஜானா பேகம் உடலில் பெரிய அளவில் காயங்கள் இல்லாத நிலையில் கொள்ளையடிப்பதற்காக மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டாரா இல்லை வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் முழுமையான விபரங்கள் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
No comments