Breaking News

சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியில் ஒரே நாளில் 4 கோயில்களின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கொள்ளிடம் அருகே அளக்குடி  கிராமத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த கூத்தபெருமாள் அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முதல் நாள் விக்னேஸ்வர பூஜை,எஜமானர் சங்கல்பம், கலச பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, கோ பூஜை, அஷ்ட பூஜை நடைபெற்று தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து மாலை வாஸ்து சாந்தி, பிரவேசப்பலி,கும்ப அலங்காரம் நடைபெற்று முதல் கால பூஜையில் மூல மந்திர ஹோமம்,விசேஷ திரவிய ஹோமம் நடைபெற்று தீபாரதனைக்கு பிறகு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மறுநாள் காலை இரண்டாம் கால பூஜையில் சதுர்வேத பாராயணம், உபசாரம், ஆசிர்வாதம் நடைபெற்று தீபாராதனைக்கு பிறகு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை மூன்றாம் கால யாகபுஜையும், அதனைத் தொடர்ந்து நேற்று காலை நான்காம் கால யாக பூஜையில் விக்னேஸ்வர பூஜை, சூரிய பூஜை, மூல மந்திர ஹோமம், நாடி சந்தானம், விசேஷ திரவிய ஹோமம் நடைபெற்று யாகசாலையிலிருந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கடங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் மூலவர் ஸ்ரீ கூத்த பெருமாள் அய்யனார் கோயில் விமான கலச கும்பாபிஷேகமும், ஸ்ரீ விநாயகர், முருகன், வீரன், நாகராஜன், நாகராணி, சப்த கன்னிகள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 


இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அளக்குடி கிராமவாசிகள் மற்றும் திருப்பணி குழுவினர் சார்பில் செய்திருந்தனர். இதேபோல் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் கடந்த 34 வருடங்களுக்குப் பிறகு திருப்பணி நடைபெற்று நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து புளியந்துறை கிராமத்தில் உள்ள வீரனார் கோயில் கும்பாபிஷேகத்திலும் சந்தபடுகை முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழாவிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!