கடம்பா குளத்தில் விவசாயிகள் இலவச கறம்பை மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.
கடம்பா குளத்தில் இலவச கறம்பை மண் எடுக்கும் அனுமதியை ஆளுங்கட்சியினரின் நிர்பந்தத்தால் அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். எனவே, தொடர்ந்து கறம்பை மண் எடுக்க அனுமதி அளிக்க கோரி தென்திருப்பேரை சுற்றுவட்டார தேவேந்திரகுலவேளாளர் கடம்பாகுளம் விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தென்திருப்பேரை சுற்றுவட்டார தேவேந்திரகுல வேளாளர் கடம்பாகுளம் விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் கல்லை சிந்தா தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடம்பாகுளத்தில் விவசாய பயன்பாட்டுக்காக 79 ஆயிரத்து 35 கனஅடி வண்டல் மண் இலவசமாக எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் விவசாயிகள் கறம்பை மண் எடுத்து வந்தனர்.
இந்நிலையில் ஆளுங்கட்சியினரின் நிர்பந்தத்தால் தற்போது மண் எடுக்கும் அனுமதியை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். எனவே, கடம்பா குளத்தில் தொடர்ந்து விவசாயிகள் கறம்பை மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும். மேலும், கடம்பாகுளம் மடைஎண் 5, 6 பகுதியில் மண் மேடாக உள்ளது.
அதனால், பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் சரியாக வருவது இல்லை. எனவே, அந்த பகுதியில் அளவீடு செய்து, முறையாக மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் தெரிவித்துள்ளனர்.
No comments