ஸ்ரீவைகுண்டம் பட்டாசு ஆலை விபத்து; ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு வாலிபர் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ராம்குமார். இவர் நாசரேத் அருகே குறிப்பன்குளத்தை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இந்த ஆலையில் பேன்ஸி ரகப்பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
கடந்த 31-ந்தேதி அங்குள்ள ஒரு கட்டிடத்தில் நாசரேத் அருகே அரசர்குளத்தை சேர்ந்த முத்துகண்ணன்(வயது 21), விஜய் (25), ஸ்ரீவைகுண்டம் தாலுகா புளியங்குளத்தை சேர்ந்த செல்வம் (26), ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செம்பூரை சேர்ந்த சுந்தரம் மகன் ஐசக் பிரசாந்த் (26), சின்னமதிகூடலை சேர்ந்த செந்தூர்கனி, முத்துமாரி ஆகிய 6 தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் இருந்தனர். அன்று மாலை நடந்த வெடி விபத்தில், அறையில் பணியில் இருந்த முத்துக்கண்ணன், விஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். செல்வம், பிரசாந்த், செந்தூர்கனி, முத்துமாரி ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஐசக் பிரசாந்த், செல்வம் ஆகியோர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே தொடர்ந்து ஆபத்தான கட்டத்திலேயே சிகிச்சையில் இருந்த ஐசக் பிரசாந்த் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதனால் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments