Breaking News

ஊழியர் வாங்கிய கடனுக்காக மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் பொருட்களை நீதிமன்றம் ஜப்தி செய்த சம்பவம்.


நீதிமன்றம் பலமுறை கேள்வி கேட்டும் பதில் அளிக்காததால், ஊழியர் வாங்கிய கடனுக்காக மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் பொருட்களை நீதிமன்றம் ஜப்தி செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருபுவனை அரியூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி.இவர் அரியூர் அங்கன்வாடி மையத்தில் பல்நோக்கு ஊழியராக பணியாற்றி வந்தார். 2012ஆம் ஆண்டு தனியார் நிறுவனத்தில் ரூ.8.50 லட்சம் கடன் பெற்றார். இதற்கான மாத தவணை தொகையை சில மாதம் மட்டும் செலுத்தினார். இதன்பின் பணத்தை கட்டவில்லை.

இந்த பணத்தை வசூலிக்க தனியார் நிறுவனம் பல்வேறு முயற்சி எடுத்தும் பயனில்லை. இதையடுத்து தனியார் நிறுவனம் புதுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்துக்கு, விஜயலட்சுமியின் சம்பளம், எத்தனை ஆண்டுகள் பணி புரிகிறார் என்ற விளக்கம் கேட்டது.

இதை அவர்கள் வழங்கவில்லை. இதன்பின் அவரின் சம்பளத்தில் பணத்தை பிடித்தம் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதற்கும் மகளிர் மற்றும் மேம்பாட்டுக்கழகம் நடவடிக்கை எடுக்காததால், கடன் தொகை ரூ.8 1/2 லட்சத்துக்கு வட்டி, அபராதம் ஆகியவற்றுடன் ரூ.13 1/2 லட்சத்தை மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் அசையும் சொத்துக்களில் இருந்து ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து கோர்ட்டு அமீனா அம்பி, நடேசன் நகரில் உள்ள மகளிர் மற்றும் மேம்பாட்டுக்கழக அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலி, கம்ப்யூட்டர் பொருட்களை ஜப்தி செய்தார்.கடந்த 2018ஆம் ஆண்டு விஜயலட்சுமி ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி

No comments

Copying is disabled on this page!