தூத்துக்குடியில் இருந்து மலேசிய, சிங்கப்பூர், அரபு நாடுகளுக்கு விரைவில் விமானம் இயக்கப்படும்! விமான நிலைய ஆணையக்குழுத் தலைவர் சுரேஷ் தகவல்!
இந்திய விமான நிலைய ஆணையக்குழுத் தலைவர் சுரேஷ் நேற்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யும் பணிகள் ரூ.319 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்த பணிகள் நிறைவடையும்.
மேலும், தகவல்தொடர்பு உள்ளிட்ட பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும். இப்பணிகள் நிறைவடைந்த பின்னர், இங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர், அரபுநாடுகள் ஆகியவற்றிற்கு பயணிகள் விமானம் இயக்கப்பட்டு, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்படவுள்ளது. மேலும் இரவுநேர விமானங்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோன்று சரக்கு விமான சேவையும் தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக மலேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கபப்படவுள்ளது.
மேலும், 320 பயணிகள் செல்வதற்கு ஏற்றாற்போல் விமான நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வருங்காலங்களில் ஏ-321 என்ற பெரிய ரக விமானங்கள் இயக்கப்படலாம். பயணிகளின் தேவைக்கற்ப விமான நிலையங்களை தொடர்ந்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து, தமிழ்நாடு அரசு அதற்கான ஒப்பந்தத்தை வெளியிட்டவுடன் இந்திய விமான ஆணையம் இணைந்து பரந்தூர் விமான நிலையத்தை அமைக்கும் பணியினை தொடங்கும்.
அதேபோல் தஞ்சாவூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடம் தமிழ்நாடு அரசிடம் கேட்கப்பட்டுள்ளது என்றார். பேட்டியின்போது, தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் ராஜேஷ், விமான நிலைய மேலாளர் ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments