திண்டிவனம் அருகே மனைவி, மகன் கண் முன்னே மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி; சோகத்தில் மூழ்கிய கிராமம்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வைடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் ராஜேந்திரன் (39) இவரும் இவரது மனைவி ருக்மணி (30) மகன் புவியரசன் (10) ஆகியோர் வைடப்பாக்கத்தில் உள்ள தங்களது 4 ஏக்கர் நிலத்தில் வேர்க்கடலை பயிரிடப்பட்டுள்ள பகுதியில் களை எடுக்கும் வேலை செய்து வந்துள்ளனர்.
அப்போது தீடீரென இடி மின்னலுடன் பெய்த மழையால் அவர்களது நிலத்தில் உள்ள வேப்பமரம் அருகாமையில் மூன்று பேரும் நின்று இருந்துள்ளனர். அப்பொழுது திடீரென இடியுடன் கூடிய மின்னல் மரத்தின் மேல் விழுந்ததில் கீழே நின்றிருந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே மின்னல் தாக்கி உயிரிழந்து உள்ளார். இந்நிலையில் அவரது அருகாமையில் இருந்த மனைவி ருக்மணி மற்றும் மகன் புவியரசன் ஆகியோர் காயமடைந்த நிலையில் அவர்களை முறுக்கேறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து சம்பவம் அறிந்து வந்த பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி மகன் கண் முன்னே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments