குறிப்பன்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்து; உரிமையாளர் கைது.
குறிப்பன்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயம்; ஆலை உரிமையாளர் சாத்தூரில் கைது - தமிழக முதல்வர் 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த ராம்குமார். இவர் நாசரேத் அருகே குறிப்பன்குளத்தை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் பேன்ஸி ரகப்பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. நேற்று ஒரு கட்டிடத்தில் நாசரேத் அருகே அரசர்குளத்தைச் சேர்ந்த கள்ளவாண்டான் மகன் முத்துகண்ணன்(21), கமுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் விஜய்(25), புளியங்குளத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் செல்வம்(26), செம்பூரைச் சேர்ந்த சுந்தரம் மகன் பிரசாந்த்(26), சின்னமதிகூடலைச் சேர்ந்த செந்தூர்கனி, முத்துமாரி ஆகிய 6 தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் இருந்தனர்.
இவர்கள் இருந்த அறைக்கு அருகே உள்ள அறையில் மாலை 5.30 மணியில் திடீரென பட்டாசுகள் வெடித்தன. இதில் இருந்த வந்த தீப்பொறிகள் விழுந்து, தொழிலாளர்கள் பணியாற்றிய அறையில் இருந்த பட்டாசுகளும் வெடிக்க தொடங்கின. இதிலிருந்து தொழிலாளர்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த விபத்தில், அறையில் பணியில் இருந்து முத்துகண்ணன், விஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். செல்வம், பிரசாந்த், செந்தூர்கனி, முத்துமாரி ஆகியோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாசரேத் போலீஸாரும், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகள் அதிகமாக இருந்ததால், ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்தன. இதில், காயமடைந்த பிரசாந்த், செல்வம் ஆகியோர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், செந்தூர்கனி, முத்துமாரி ஆகியோர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழந்த விஜய், முத்துகண்ணன் ஆகியோர் சடலங்கள் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுகுறித்து நாசரேத் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த முத்து கண்ணன் மற்றும் விஜய் ஆகிய இருவருக்கும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கினார். மேலும் இதில் படுகாயம் அடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரண தொகையை தமிழக முதல்வர் அறிவித்தார்.
இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஆலையின் உரிமையாளர் ராம்குமார் என்பவரை நாசரேத் போலீசார் சிறிது நேரத்திற்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பதுங்கி இருந்த ராம்குமாரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விபத்துக்கான காரணம் என்ன? அதிக அளவு பட்டாசு இருப்பு வைக்கப்பட்டுள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? ஆகிய கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments