மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் முதல் கூட்டத்தில் பேரணியாக வந்து பங்கேற்ற கட்சியினர்.
தமிழ்நாட்டில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கட்சியினர் பேரணியாக வந்து கூட்டத்தில் பங்கேற்றனர். மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் குட்டி கோபி, மாவட்ட செயலாளர் தளபதி அமீன், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார், உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோரை பங்கேற்க செய்ய வேண்டும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு மாநாட்டில் சென்று பங்கேற்க வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்சியினர் திறம்பட மக்கள் பணி செய்து கட்சி வளர்ச்சி அடைய பாடுபட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதல் கூட்டத்தில் முத்தாய்ப்பாக மாநாடு நடத்தப்படவுள்ளதை முன்னிட்டு கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments