Breaking News

தொழிலாளர் விரோத போக்கில் ஈடுபடும் சமரச அதிகாரி மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆவேசம்!


புதுச்சேரியில் தொழிலாளர் விரோத போக்கில் ஈடுபடும் சமரச அதிகாரி மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆவேசம், தொழிலாளர் விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தொழிலாளர் துறை சமரச அதிகாரி மீது புதுச்சேரி அரசு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தொமுச பேரவை சார்பில், புதுச்சேரி தொழிலாளர் விரோத என்.ஆர். காங்கிரஸ்–பாஜக கூட்டணி அரசையும், தொழிலாளர் துறையையும் கண்டித்து, தொழிலாளர் துறை வளாகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச பேரவைத் தலைவர் அண்ணா அடைக்கலம் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் வி. அனிபால் கென்னடி, எல். சம்பத், தொகுதி செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், வடிவேல், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூ. மூர்த்தி வரவேற்று பேசினார். மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார். 

அப்போது, புதுச்சேரி மாநிலத்தில் தொழிலாளர் விரோத அரசு நடக்கிறது. புதிய தொழிற்சாலைகளை கொண்டுவரும் முயற்சியில் இந்த அரசு ஈடுபடவில்லை. ஆனால் நன்றாக இயங்குகின்ற தொழிற்சாலைகளை மூடுவிழா காணும் அரசாக இந்த அரசும், தொழிலாளர் துறையும் இருக்கிறது. தொழிலாளர்களின் குறைகளை காதுகொடுத்து கேட்காத தொழிலாளர் துறை முதலாளிகளுக்கு ஆதரவாக கையூட்டு பெற்றுக்கொண்டு தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வாழ்வளித்த எல்&டி நிறுவனம் இன்று தனது கிளையை மூடிவிட்டு சென்றுள்ளது. இதனால் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

எம்ஆர்எப் தொழிற்சாலையில் பெரும்பான்மை தொழிலாளர்களின் ஒருமித்த கருத்துக்கு எதிராக நிர்வாகம் தொழிலாளர் துறையை கையிள் வைத்துக்கொண்டு செட்டில்மெண்ட் பேசுகிறது. ஹெடிசைன் தொழிற்சாலை நிர்வாகம் 30 ஆண்டுகளாக தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி கடந்த மூன்று ஆண்டாக அவர்களுக்கு உரிய போனஸ், சம்பளத்தை வழங்க மறுக்கிறது. புதுச்சேரி அரசு குறைந்தபட்ச கூலி கொடுக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் பெரும்பாலான தொழிற்சாலைகள் குறைந்தபட்ச கூலியை தொழிலாளர்களுக்கு கொடுக்க மறுக்கிறது. தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு என்பது இன்று கேள்விக்குறியாகி உள்ளது. இப்படி தொழிற்சாலை முதலாளிகள் செய்யும் அடாவடித்தனத்தை தொழிலாளர் துறை ஆணையர் மற்றும் சமரச அதிகாரியிடம் தொழிலாளர்கள் புகார் தெரிவித்தால் அந்த அதிகாரிகள் தொழிற்சாலை முதலாளிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு தொழிலாளர்களை வஞ்சிக்கின்றனர். தொழிலாளர்களுக்கு எதிராகவும், தொழிற்சாலை முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் தொழிலாளர் துறை சமரச அதிகாரி வெங்கடேசன் மீது புதுச்சேரி அரசு விசாரணை கமிஷன் அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தொழிலாளர் துறை ஆணையரின் வேலை என்ன என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். 

புதுச்சேரி அரசு 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்து அது கிடப்பில் உள்ளது. 1004 பணியிடங்களுக்கு அறிவிப்பு செய்து அதுவும் கிடப்பில் உள்ளது. நிர்வாக சீர்கேடு உள்ள அரசாகவும், படித்த இளைஞர்கள், தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கும் அரசாகவும் என்.ஆர். காங்கிரஸ்–பாஜக கூட்டணி அரசு உள்ளது. இந்த அரசு தொடர்ந்து தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்தால் அதற்கான விலையை மக்களும், தொழிலாளர்களும் தக்க நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு பேசினார்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக நிர்வாகிகள், எம்ஆர்எப், எம்பிடில், ஹைடிசைன், எல்&டி தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் புதுச்சேரி அரசையும், தொழிலாளர் துறையையும், தொழிலாளர் துறை சமரச அதிகாரியையும் கண்டித்து முழக்கமிட்டனர்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில துணை அமைப்பாளர்கள் தைரிநாதன், ஏ.கே.குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், கே.எம்.பி. லோகையன், டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி. கோபால், வே. கார்த்திகேயன், ந. தங்கவேலு, பெ. வேலவன், வீ. சண்முகம், ஆர். ரவீந்திரன், பெ. பழநி, நா. கோபாலகிருஷ்ணன், எஸ். அமுதாகுமார், எஸ். நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் எம்.ஆர். திராவிடமணி, இரா. சக்திவேல், வ. சீத்தாராமன், பாண்டு அரிகிருஷ்ணன், செ. நடராஜன், எல். மணிகண்டன், து. சக்திவேல், கோ. தியாகராஜன், ர. சிவக்குமார், ஜெ. மோகன், பி.ஆர். ரவிச்சந்திரன், வெ. சக்திவேல், க. ராஜாராமன் பி.சா. இளஞ்செழியபாண்டியன், கலிய. கார்த்திகேயன், ம. கலைவாணன், தொமுச அங்காளன், வை.காயாரோகணம், ராமகிருஷ்ணன், சிவக்குமார், மிஷேல், சீனுவாசன், துரை, ராஜேந்திரன், ரவி, கண்ணன் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!