வில்லியனூர் தொகுதியில் ரூ. 7 லட்சம் செலவில் நீர்பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியினை எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தில்லை நகர் கருப்பட்டி வாய்க்கால், மாதா கோவில் வாய்க்கால், பாலாஜி நகர் வாய்க்கால், ஒதியம்பட்டு வாய்க்கால், பெரம்பை வாய்க்கால் மற்றும் பெரிய பேட் வாய்க்கால்கள் மழைக்காலத்திற்குள் தூர்வார வேண்டும் என்று பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளனிடம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா கோரிக்கை வைத்திருந்தார்.
அதனடிப்படையில் வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட மேற்கண்ட நீர்பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிக்காக பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்டம் மூலம் ரூ. 6 லட்சத்து 83 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கலந்து கொண்டு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில், அதிகாரிகள், தொகுதி திமுக நிர்வாகிகள் உட்பட அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments