Breaking News

குழந்தை பிறந்ததில் இருந்து ஆறு மாதம் வரை நிச்சயம் தாய் பால் கொடுக்கவேண்டும் என இளம் பெண்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை.


சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஓருங்கிணைந்து குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து மாத விழா தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். ஓருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் காயத்ரி வரவேற்றார். விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று திருவிளக்கேற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், சிறந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். 

பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், இந்த ஊட்டச்சத்து மாத விழா சிறப்பான முறையில் நடைபெற்ற வருகிறது. இந்த துறை மூலம் இளம் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு அளித்துக்கொண்டே இருக்கவேண்டும். அதேபோல் பணிபுரியும் பெண்களுக்கு குழந்தைகளை வளர்ப்பது சிரமமாகத்தான் இருக்கும். கணவர் வேலைக்கு செல்லும் போது குழந்தைகளின் முழு பொறுப்பும் இல்லத்தரசிகளின் கையில்தான் இருக்கிறது. 

ஒரு குழந்தையின் வளர்ச்சி என்பது கருஉருவான நாள்முதல் குழந்தைக்கு இரண்டு வயது முடியும் வரை உள்ளது. கருஉருவாகும் போது நல்ல சத்தாண உணவை தாய் உட்கொள்ளும்போது குழந்தை ஆரோக்கியமாக வளரும். அதேபோல் குழந்தை பிறந்த பிறகு, குழந்தைக்கும் நல்ல சத்தாண உணவை கொடுக்கவேண்டும். குழந்தை பிறந்ததில் இருந்து ஆறு மாதம் வரை நிச்சயம் தாய் பால் கொடுக்கவேண்டும். ஆறு மாதத்திற்குபிறகு கீரை, பருப்பு, நெய் சோறு மற்றும் தானியவகை உணவுகள் குழந்தைகளுக்கு கொடுத்து வரவேண்டும். 

இரண்டு வயது ஆன குழந்தை அறுபது சதவீத மூளை வளர்ச்சி அடைந்துவிடும். ஆகவே நல்ல மூளை வளர்ச்சி உள்ள குழந்தை, ஆரோக்கியமான குழந்தை, அறிவாற்றல் மிக்க ஒரு குழந்தையாக திகழவேண்டும் என்றால் நிச்சயமாக இரண்டு வயது வரைக்கும் அதிககவனம் செலுத்தவேண்டும். குழந்தை பிறந்து 1000 நாட்கள் மிக முக்கியமான நாட்கள் ஆகும். அதற்கு பிறகும் குழந்தைக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுக்க வேண்டும். 

தானிய வகைகள், நல்லெண்ணெய், பேரிச்சம் பழம், நெல்லிக்காய், மாதுழம் பழம், முருங்கைகீரை, அரைக்கீரை, பாலக்கீரை போன்ற சத்தான உணவு கொடுக்கும் போது குழந்தை ஆரோக்கியமாகவும், நோய் எதிப்பு சக்தியுடனும் வளரும். தொடந்து இதனை கடைபிடிக்கும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். அதேபோல் அனைத்து பெண்களும் ஊட்டச்சத்துமிக்க உணவினை சாப்பிடவேண்டும். 

அதனைத்தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கான 1000 நாட்கள் மற்றும் இரத்தசோகை என்ற தலைப்பில் நடைபெற்ற கோலப்போட்டியினையும், சிறுதானிய உணவு கண்காட்சியினையும் பார்வையிட்டு, கோலப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கும், சிறுதானியஉணவு என்ற தலைப்பில் நடைபெற்ற சமையல் போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் அமைச்சர் கீதாஜீவன் பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கிழக்கு மண்டலத்தலைவர் கலைச்செல்வி, கவுன்சிலர்கள் சரண்யா, ராமுஅம்மாள், நாகேஸ்வரி, வைதேகி, ஜெயசீலி, மரியகீதா, விஜயகுமார், பவாணி மார்ஷல், மாநகர துணைச்செயலாளர் பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், பெல்லா, மாவட்ட அணி நிர்வாகிகள் அருண்குமார், கவிதாதேவி, அருணாதேவி, பார்வதி, அந்தோணி கண்ணன், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணை இயக்குநர் மல்லிகா, உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை தலைவர் கரோலின், ஊட்டச்சத்து அலுவலர் திலகா மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி பெர்ணான்டோ நன்றி கூறினார். 

No comments

Copying is disabled on this page!