பரமக்குடியில் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பிடிஓ கைது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் பழனிமுருகன். இவர் பரமக்குடி அருகே உள்ள ஒரு ஊரணியில் வண்டல் மண் எடுப்பதற்கு வருவாய் துறையிடம் அனுமதி பெற்றுள்ளார். வருவாய்த்துறை அனுமதி பெற்ற நிலையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைச்சீட்டு பெறுவதற்கு பரமக்குடி யூனியன் பிடிஓ கருப்பையாவை அணுகியுள்ளார். இதற்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டுமென பிடிஓ கூறியுள்ளார். இதுகுறித்து பழனிமுருகன் இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின் படி ரசாயனம் தடவிய ரூபாய் 10 ஆயிரத்தை பழனிமுருகன் பிடிஓ கருப்பையாவிடம் லஞ்சமாக வழங்கி உள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் பிடிஓ கருப்பையாவை கையும், களவுமாக பிடித்தனர். இச் சம்பவத்தில் தொடர்புடைய அலுவலக உதவியாளர் கண்ணன் என்பவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருகின்றனர்.
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று காலை மாவட்ட ஆட்சியர் பரமக்குடி தாலுகாவில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இன்று காலை முதல் மாவட்ட ஆட்சியருடன் பிடிஓ கருப்பையா இருந்த நிலையில் மாலை பணிகள் முடிந்து மாவட்ட ஆட்சியர் ராமநாதபுரம் சென்ற நிலையில் லஞ்சம் வாங்கியதாக பிடிஓ கருப்பையா கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments