Breaking News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “பெண் குழந்தைகளை காப்போம்” “பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம்”; “பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி  கொடியசைத்து தொடங்கி வைத்து, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகையை வெளியி;ட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசிய போது, தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் அரசானது பெண் குழந்தைகளை பாதுகாத்து அவர்கள் கல்விக்கு ஊக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசானது பெண் கல்வியை ஊக்குவிக்க புதுமைப்பெண் திட்டம,; அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமூகநலத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் குடும்பத்தில் பெண் குழந்தை மட்டும் இருப்பின் அப்பெண் குழந்தையின் பெயரில் ரூ.50,000 மேம்பாட்டு  நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தை மட்டும் இருப்பின், ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25,000 தமிழ்நாடு மின்மிசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. அதில், ஒரு பெண் குழந்தையாக இருப்பின் அக்குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு பெண் குழந்தைகள் எனில் இரண்டாவது குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வளரும் பருவத்தில் திருமண பாரம் வேண்டாம். குழந்தை திருமணத்தை ஆதரிப்பதும், நடத்தி வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். குழந்தை திருமண தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் - 1098 அல்லது 1091 அல்லது 181 என்ற எண்ணையும் அழைக்கலாம். உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.  தனிப்பட்ட இடத்திலோ அல்லது பொது இடத்திலோ வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஆதரவை “சகி” என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மூலம் பெறலாம். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்டரீதியான உதவிகளையும், மருத்துவ ரீதியான உதவிகளையும், காவல்துறை ரீதியான உதவிகளையும், உளவியல் ரீதியான ஆலோசனைகளையும் ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் பெறலாம். தொடர்புக்கு மகளிர் உதவி மைய  181-யை  அழைக்கலாம். ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பினை உறுதி செய்திட, அனைத்து காவல் நிலையத்திலும் குழந்தை நேய பாதுகாவலர் உங்களுக்காக காத்திருக்கிறார். பெண்  குழந்தைகள் நம் கண்கள். தன்னம்பிக்கையும்,வீரமும் ஊட்டி பாதுகாப்பது நம் கடமை என   மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு வாகனமானது, மயிலாடுதுறை, செம்பனார்கோவில், கொள்ளிடம், குத்தாலம், சீர்காழி ஆகிய வட்டாரத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநல அலுவலர் சுகிர்தா தேவி;, முதன்மைக்கல்வி அலுவலர் ஜெகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவவேலு,  குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!