முதலமைச்சர் கோப்பை 2024க்கான, மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை-2024க்கான முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், கொடியசைத்து தொடங்கி வைத்து தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழகம் முழுவதும் விளையாட்டில் சிறந்து விளங்கி வருபவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு, அதற்கென பல்வேறு வகையான சிறப்பு திட்டங்களும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் இளைஞன் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்திட அரசால் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இவ்வாண்டு முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் கடந்த (10.09.2024) அன்று சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களால் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத்திலும் முதலமைச்சர் கோப்பை - 2024 தொடர்பான மாவட்ட அளவிலான போட்டிகள் அந்தந்த மாவட்டங்களில் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இவ்வாண்டில் நடத்தப்படவுள்ள போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு, அதில் 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்கள், 17 வயது முதல் 25 வயது வரை உள்ள கல்லுாரி மாணவ மாணவியர், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள், 15 வயது முதல் 35 வயது வரை உள்ள பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் (Category) 35 வகையான விளையாட்டுக்கள் 168 பிரிவுகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற 24.09.2024 வரை நடத்தப்படவுள்ளது.
அதன்படி, இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு போட்டிகளானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.3000/-மும், இரண்டாம் பரிசாக தலா ரூ.2000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.1000/-மும் வழங்கப்பட உள்ளது.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி, தோல்விகள் என்பதை கருத்தில் கொள்ளாமல், முதலில் நாம் அதில் பங்கு கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் பல்வேறு போட்டிகளில் பங்கு கொள்வதன் அடிப்படையில், தங்களது திறன்களை வெளிக்கொணருவதற்கான வாய்ப்பாக அவை அமையும். இதனைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு விருப்பமான விளையாட்டுப் போட்டிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அதில் வெற்றி பெற்று, அதன்மூலம் தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.சி.ரமேஷ்கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.கா.பாலகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள பயிற்சியாளர் திரு.ஜெ.ரஞ்சித் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments