தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 1.5 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது என தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்தார்.
கூட்டத்தில் தமிழ்நாட்டின் முக்கியமான உப்பு உற்பத்தி மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், நாகப்பட்டிணம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து பெரிய மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பு வியாபாரிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அப்போது அயோடின் உப்பு மட்டுமே தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் அயோடின் இல்லாத உப்பு கேட்கின்றனர், ஆகையினால் அயோடின் கலக்காத உப்பு விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என உற்பத்தியாளர் கேட்டுக் கொண்டனர்.
பின்னர் தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிற்கு மேல் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. அதில், 4 ஆயிரம் உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளனர். உப்பு உற்பத்தியாளர்கள் சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியானது தமிழ்நாடு முழுவதும் உப்பு உற்பத்தி நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று களஆய்வு மேற்கொள்ள உள்ளது.
இந்த ஆய்வின் மூலம் உப்பு உற்பத்தியாளர்களுக்கு நிலம், உரிமம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கப்படுவதோடு, அதுகுறித்து அரசுக்கு தெரிவித்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட உப்பு உற்பத்தியாளர் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டில் ஆண்டிற்கு 1.5 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இதில் 1 லட்சத்து 10 ஆயிரம் டன் உப்பு தொழிற்சாலைகளுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டு வருகிறது. உப்பு தயாரிப்பில் தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நவீன இயந்திரங்கள் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்றுமதி தொடர்பான பிரச்னைகள், சந்தேகங்கள் இருந்தால் அவை உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.
No comments