பிரசித்தி பெற்ற பஞ்சாக்கை அக்னிபுரீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா சங்காபிஷேகம் ஆதீனம் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூர் அருகே பஞ்சாக்கை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, கற்பகாம்பிகை சமேத அக்னிபுரீஸ்வரர் கோவில் சிறப்புமிக்க கோயிலாகும். வைப்புத்தலமான இக்கோவிலில் தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானங்களின் ஜென்ம நட்சத்திர திருநாளில் வழிபாடு செய்யும் சிறப்பு உடையது. கோவிலில் சுவாமி, அம்பிகையை வழிபட்டால் தீமைகள் சத்ரு உபாதைகள் நீங்கி, சகல ஐஸ்வரியங்களும் நீண்ட ஆயுளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இக்கோவிலானது சிதிலமடைந்து இருந்த நிலையில், திருப்பணி செய்து முடிக்கப்பட்டு கடந்த ஜூலை 12ஆம் தேதி கும்பாபிஷேகம் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் கும்பாபிஷேகம் முடிந்து மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா மற்றும் 108 சங்காபிஷேகம் இன்று கோவிலில் நடைபெற்றது.
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் ,கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் தரிசனம் செய்து வழிபட்டனர், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
No comments