பொன்னேரி அருகே கர்ப்பிணி தாய்மார்களின் வசதிக்காக கூடுதல் மருத்துவர்களை பணியமர்த்திட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட காங்கிரஸ் எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நாள்தோறும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகள், பேறுகால சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது சிகிச்சைக்காக வந்திருந்த கர்ப்பிணிகள் கூடுதல் மருத்துவர்களை நியமித்திட வேண்டும் என கேட்டு கொண்டனர். ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே உள்ள இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாள்தோறும் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வாரத்திற்கு 3நாட்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனைகள் நடத்தப்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுவதாகவும், குறைந்தது கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக வரும் நாட்களிலேனும் கூடுதல் மருத்துவர்களை நியமித்திட வேண்டும் என எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர்.
மேலும் ஸ்கேன் உட்பட அனைத்து அத்தியாவசிய உபகரணங்களுடன் தரமான சிகிச்சை கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டு கொண்டனர். இது தொடர்பாக சுகாதார துறை அமைச்சர் சந்தித்து நடவடிக்கை எடுப்பதாக அப்போது எம்எல்ஏ துரை.சந்திரசேகர் உறுதியளித்தார்.
No comments