Breaking News

சீர்காழி அருகே 9லட்சத்தில் அரசு உதவிபெறும் பள்ளியை சீரமைத்து வழங்கிய முன்னாள் ஆசிரியை; தமிழ்வழி கல்வி பயின்றால் பல்வேறு நன்மைகளை பெறலாம்.


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே 76 ஆண்டுகள் பழமையான பள்ளி கட்டடம் சேதமடைந்ததால் மரத்தடியில் கல்வி பயின்ற மாணவ, மாணவிகளின் நிலை குறித்து அறிந்த பள்ளியின் முன்னாள் ஆசிரியை தமது சொந்த செலவில் பள்ளியை சீரமைத்து திங்கள்கிழமை பயன்பாட்டிற்கு அளித்தார். அப்போது தமிழ் வழியில் கல்வி பயின்றால் பல்வேறு அரசு சலுகைகளை பெற்று உயர்ந்த நிலையடையலாம் என்றார்.

சீர்காழி அருகே பண்ணக்காரகோட்டகம் கிராமத்தில் வசந்தலா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி 1948 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தற்போது 100 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பழமையான இப்பள்ளி ஓட்டு கட்டடத்தில் இயங்கி வந்த நிலையில் அவை மிகவும் சேதம் அடைந்து கட்டடம் சிதிலமடைந்திருந்ததால் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்தும், அருகிலிருந்த அங்கன்வாடியிலும் கல்வி பயிலும் நிலை இருந்தது. 

மழைக்காலங்களில் மாணவ, மாணவிகள் மிகவும் பாதிப்படைந்தனர்.  இந்நிலையில் பள்ளியில் 36 வருடங்கள் பணியாற்றிய ஓய்வு பெற்ற கலைச்செல்வி தனசேகரன்  என்ற ஆசிரியை, பள்ளியின் நிலை குறித்து அறிந்து  பள்ளி கட்டடத்தினை சீரமைக்க விரும்பி தனது மகள் செüமியா, மருமகன் விமல் ஆகியோர் ஒத்துழைப்புடன் ரூ. 9 லட்சத்தில் பள்ளி கட்டடத்தை சீரமைத்தார். புதிதாக பள்ளி கட்டடம் ஆஸ்பெஸ்டால் கூரையுடன் விசாலமாக அமைக்கப்பட்டு, மின்விசிறிகள், கரும்பலைகள் அமைக்கப்பட்டு அதனை  பயன்பாட்டிற்கு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை மாலை தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் வஜ்ரம் ராஜேந்திரன், வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, விமல்ராஜ், ஆசிரியர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ரவி வரவேற்றார். இதில் கலைசெல்வி தனசேகரன் கட்டத்தை பயன்பாட்டிற்கு வழங்கி பேசுகையில்,  தமிழ்வழியில் கல்வி கற்பதன் மூலம் வாழ்க்கையில் பல்வேறு சிறப்புகளை அடைய முடியும்.  தமிழ் வழி கல்வி கற்பவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகள், திட்டங்களை வழங்கி வருகிறது. பெற்றோர்களுக்கும் அரசு திட்டங்களை தீட்டி வழங்கி வருகிறது.  தமிழ் வழி கல்வி கற்கும் வகையில் பெற்றோர்கள்  தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து, மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என நெகிழ்ச்சியுடன் கூறினார். 

தொடர்ந்து பட்டிமன்ற பேச்சாளர் சௌமியா விமல் பேசுகையில், மாணவர்கள் நன்னெறி கல்வி, வாழ்க்கை கல்வி ஆகிய இரண்டையும் கற்பதினால் வாழ்க்கையில் சிறப்படையலாம். நேரம் தவறாமை, நேர்மை இந்த இரண்டையும் மாணவர்கள் கடைபிடித்தால் வாழ்வில் உயரலாம் என்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சரிதா, நல்லமணி செய்திருந்தனர். நிறைவில் ஆசிரியர் முருகேசன் நன்றிக்கூறினார்.

No comments

Copying is disabled on this page!