இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கால் சென்டர் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த 7 பேரை கைது செய்த சைபர் க்ரைம் போலீசார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோகிலா. இவர் இணையத்தில் குளோபல் சாப்ட்வேர் சொல்யூஷன்" என்கிற ட்ரேடிங் கம்பெனியின் விளம்பரத்தை பார்த்து பல்வேறு தவணைகளாக ரூ.18 லட்சம் அனுப்பி ஏமாந்தார். இது தொடர்பாக கோகிலா அளித்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மோசடியில் ஈடுபட்டவர்கள் பெங்களூர் மற்றும் நெய்வேலியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் தலைமையிலான போலிசார் பெங்களூர் சென்று குற்றவாளிகளான பெங்களூரை சேர்ந்த முகமது அன்சர், அகமது, ப்ரவீன் மற்றும் நெய்வேலி சேர்ந்த ஜெகதீஷ் ராமச்சந்திரன் பிரேமானந்த் விமல் ராஜ் ஆகிய ஏழு பேரை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியா, துபாய், ஹாங்காங், தாய்லாந்து உட்பட வெளிநாடுகளில் கால் சென்டர்கள் அமைத்து கோடிக்கணக்கில் ஏமாற்றியது தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான நெய்வேலியை சேர்ந்த நவ்சர் கான் அகமது என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மோசடிக்காரர்களிடம் இருந்து 4 சொகுசு கார், ஒரு விலை உயர்ந்த பைக், வேன், கம்ப்யூட்டர் கிரெடிட் கார்டுகள் டெபிட் கார்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை போலிசார் பறிமுதல் செய்தனர்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments