சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதி விவசாய நிலங்களில் தொடர் மின் மோட்டார்கள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்தர் தலைமையில் கைது. இதில் போலீஸ் பிடியிலிருந்து தப்ப முயன்ற இருவர் கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் கொள்ளிடம் வட்டாரங்களில் தொடர்ந்து விவசாய நிலங்களில் மின் மோட்டார்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து திருட்டு போய்க்கொண்டிருந்தது. இது குறித்து விவசாயிகள் மற்றும் மின்சாரத்துறை சார்பாகவும் சீர்காழி, கொள்ளிடம் ஆகிய காவல் நிலையங்களில் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் உத்தரவின் படி சீர்காழி டி.எஸ்.பி. ராஜ்குமார் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மோட்டார்கள் திருடியவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சீர்காழி காவல் ஆய்வாளர் எஸ்.புயல் பாலச்சந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளர் காயத்ரி, தனிப்பிரிவு தலைமை காவலர் மூர்த்தி, தனிப்படை காவலர்கள் விஷ்ணு, விஜயகுமார் ஆகியோர் சீர்காழி புறவழிச் சாலையில் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர்களிடம் சிறிய மின் மோட்டார் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவர்கள் மூவரையும் சீர்காழி காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை செய்ததில் அவர்கள் சீர்காழி கோயில் பத்து பகுதியை சேர்ந்த கு.சூரியபிரகாஷ் ( 23 )சீர்காழி வசந்தம் நகர் சு.காந்தி ராஜன் (33), சீர்காழி தாடாளன் கோவில் தெரு செல்லப்பா என்கிற தமிழரசன் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இந்த மூவரும் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் விவசாய நிலங்களில் தொடர் மின்மோட்டார்கள் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து 10 மின் மோட்டார்கள், ஒரு மடிக்கணினி, மோட்டார் வயர்கள், குளிர்சாதன பெட்டியின் அவுட்டர் யூனிட், இரும்பு சங்கிலி உள்ளிட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சீர்காழியில் தொடர் மின்மோட்டார்கள் திருட்டில் ஈடுபட்ட நபர்களை போலீஸார் கைது செய்த நிலையில் எந்தெந்த பகுதியில் மின்மோட்டார்கள் திருட்டில் ஈடுபட்டனர் என்பது குறித்து அறிய கைது செய்யப்பட்ட சூரிய பிரகாஷ், காந்தி ராஜன், செல்லப்பா ஆகிய மூவரையும் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் தலைமையில் நேரடியாக கொண்டு சென்று அவர்களிடமிருந்து பதுக்கி வைத்திருந்த மோட்டார்களை பறிமுதல் செய்ய நேரடியாக அழைத்துச் சென்றிருந்தனர்.
அப்போது போலீஸ் பிடியிலிருந்து சூர்யா மற்றும் செல்லப்பா ஆகிய இருவரும் தப்பிச்செல்ல முயன்றி தப்பி ஓடும்போது தடுமாறி கீழே விழுந்ததில் இருவருக்கும் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மாவு கட்டு போட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
No comments