Breaking News

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடந்த இருந்த ரூ.28 கோடி மதிப்பிலான சாரஸ் போதை பொருளை கியூ பிரிவு போலீசார் கைப்பற்றினர்.


தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடந்த இருந்த ரூ.28 கோடி மதிப்பிலான சாரஸ் போதை பொருளை கியூ பிரிவு போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக வழக்கறிஞர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைபொருள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமைக் காவலர்கள் பழனி, பாலா, முருகன், இருதயராஜ்குமார் உள்ளிட்டோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திரேஸ்புரம் வடக்கு பகுதியில் உள்ள கடற்கரையில் 3 பேர் நின்று கொண்டு இருந்தனர். 


அவர்கள் மேல் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்த 56 பொட்டலங்களை பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அது கஞ்சா செடியில் இருந்து தயாரிக்கப்படும் சாரஸ் என்ற போதை பொருள் என்றும், அதனை படகு மூலம் அவர்கள் இலங்கைக்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது. 


அதன் சர்வதேச மதிப்பு ரூ.28 கோடி என்று கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட தூத்துக்குடி திரேஸ்நகரை சேர்ந்த அமல்ராஜ் (46), தெர்மல்நகர் கேம்ப்-2 சுனாமி காலனியை சேர்ந்த நிஷாந்தன் (32), நேவிஸ்புரத்தை சேர்ந்த இன்பென்ட் விக்டர்(31)  ஆகியோரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், பிடிபட்ட அமல்ராஜ் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த போதை பொருளை அவர்கள் ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக தூத்துக்குடிக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து க்யூ பிரிவு போலீசார் பிடிபட்ட போதை பொருள் மற்றும் கைது செய்த 3 பேரையும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். 


தூத்துக்குடி பகுதியில் ரூ.28 கோடி மதிப்பிலான போதை பொருள் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Copying is disabled on this page!