மாநகராட்சி குறைதீர் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 19 பயனாளிகளுக்கு ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பொதுமக்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்யும் வகையில் புதன்கிழமை தோறும் வாரம் ஒரு மண்டலத்தில் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த புதன்கிழமை கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் 53 மனுக்கள் பெறப்பட்டன. இதில், ஒரே நாளில் 19 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து 19 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கி பேசுகையில், மாநகராட்சியில் உள்ள மக்கள் குறைகளை விரைந்து தீர்க்கும் வகையில், பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வாரந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து இம்முகாம் நடத்தப்படும். இதன் முக்கிய நோக்கம் ஒரே மாதத்தில் மனுக்களுக்கான தீர்வு அளிப்பதாகும்.
அதன்படி, முகாமில் வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. அதில், 19 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில், தீர்வை பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு உள்ளிட்டவைகள் அடங்கும் என்றார். நிகழ்ச்சியில் ஆணையர் மதுபாலன், துணை ஆணையர் ராஜாராம், மண்டல உதவி ஆணையர் சொர்ணலதா, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி ஜேஸ்பர் உள்பட கலந்து கொண்டனர்.
No comments