Breaking News

2003ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் காணொளி காட்சி மூலம் ஆஜரான விசிக தலைவர் தொல். திருமாவளவன்.


மயிலாடுதுறையில் கடந்த 2003ஆம் ஆண்டு மதமாற்ற தடைச்சட்டத்துக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் ஆஜராகாத வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்பி இன்று மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தார். 

தொடர்ந்து நீதிமன்றத்திற்கு நேரில் வந்து ஆஜராகி நீதிமன்ற ஆவணங்களில் கையெழுத்திட்டார்:- மயிலாடுதுறையில் கடந்த 2003ஆம் ஆண்டு மதமாற்ற தடைச்சட்டத்துக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி பெறப்பட்டு பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் இருந்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நெ.1 காமராஜர் சாலையில் பேரணி செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், பேரணியில் பங்கேற்றவர்கள் நெ.2 காந்திஜி சாலை வழியாக செல்ல முற்பட்டனர். 


அப்போது, காவல்துறையினர் அனுமதிக்காததால் போலீசாருக்கும், விசிகவினருக்கும் மோதல் உருவாகியது. இதில் விசிக கட்சியினர் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பாக  அப்போதைய மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் மோகனவேல் அளித்த புகாரின்பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் அப்போதைய நிர்வாகிகள் உள்ளிட்ட 42 பேர் மீது சட்டப்பிரிவு 147, 148, 188 307, 301,  தமிழ்நாடு பொது சொத்துக்கள் அழிம்பு தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்த மாதம் 31ஆம் தேதி  மயிலாடுதுறை மாவட்ட அமர்வு  நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 


இந்த வழக்கில் ஆஜராகாத விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்தார். பின்னர் விசிக வழக்கறிஞர்கள் பிடிவாரண்ட் உத்தரவை திரும்ப பெறும் மனுதாக்கல் செய்ததன் பேரில் ஆகஸ்ட் 27 ஆம் தேதியான இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிடிவாரண்ட் உத்தரவை நீதிபதி திரும்ப பெற்றார். இந்நிலையில்  இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இவ்வழக்கில் தொடர்புடைய வீசிக பொறுப்பாளர்கள் 18 பேர் ஆஜரான நிலையில்  விசிக தலைவர் திருமாவளவன் எம்பி நீதிமன்றத்திற்கு வருவதற்கு காலதாமதமானதால் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகி தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தார். 


தொடர்ந்து விசாரணை செய்த மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி வழக்கை வருகின்ற செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி ஒத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிய விசிக தலைவர் திருமாவளவன் நேரில் ஆஜராகி நீதிமன்ற ஆவணங்களில் கையெழுத்திட்டார். முன்னதாக விசிக கட்சியினர் நீதிமன்ற சாலையில் குவிந்திருந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தின் உள்ளே வருவதற்கு முடியாமல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் சிரமப்பட்டு கடும் தள்ளு முள்ளுக்கு இடையில் திருமாவளவனை உள்ளே அழைத்துச் சென்றனர்.

No comments

Copying is disabled on this page!