Breaking News

தந்தையின் நினைவை போற்றும் வகையில் வீட்டில் தந்தைக்கு கோயில் அமைத்து வழிபாடு செய்து வரும் மகன்கள்.


மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டைச் சேர்ந்தவர் காசிராமன். இயற்கை விவசாயியான இவர் வீட்டில் மழை நீரை சேகரித்து சுத்தப்படுத்தி வீட்டின் வெளியே டேங்க் அமைத்து 24 மணி நேரமும் விலை இன்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறார் இதனால் இவர் தண்ணீர் பந்தல் காசிராமன் என்று அழைக்கப்படுகிறார். 

இவரது சகோதரர் குமார் சுப்பிரமணியன் இவர் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு சாஃப்ட்வேர் கம்பெனி அமைத்து வெளிநாடுகளில் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களது தந்தை கிட்டு ஐயா இயற்கை வழி விவசாயம் மற்றும் இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையில் 80 வயதிற்கு மேல் வாழ்ந்தவர். காலில் செருப்பு அணியாமல் எந்தவிதமான நகைகளும் அணியாமல் பெரும் நிலச்சுவாந்தராக இருந்தாலும் எளிமையான மனிதராக வாழ்ந்தார். இறுதிவரை ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் இயற்கையான முறையில் வாழ்க்கையை வாழ்ந்தவர். மறைந்த தந்தையின் நினைவை போற்றும் வகையில் காசிராமன் மற்றும் குமார் சுப்பிரமணியன் இணைந்து திருவெண்காட்டில் உள்ள வீட்டில் 10 லட்ச ரூபாய் மதிப்பில் கருங்கல் மண்டபம் அமைத்து அதில் அவர்களது தந்தையான கிட்டு ஐயாவின் மார்பளவு சிலையை வடிவமைத்து கோயில் கட்டியுள்ளனர். தினமும் கோயிலில் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்கின்றனர். 


நாம் இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையை வாழ்வதுடன் வீட்டில் தாய் தந்தையரை மதித்தால் நிறைவான வாழ்க்கையை வாழலாம் என காசிராமன் தெரிவிக்கின்றார். சொத்துக்காக தாய் தந்தையை தவிக்க விடும் இந்த காலத்தில் தந்தைக்கு கோயில் அமைத்து வழிபாடு செய்து வரும் தமையன்களின் செயல் அப்பகுதியில் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது.


- சிறப்பு செய்திக்காக மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்.

No comments

Copying is disabled on this page!