Breaking News

பாலாறு மற்றும் மண்ணாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலத்தினை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் திறந்து வைத்தார்.


திருப்பத்தூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை நபார்டு திட்டத்தின் கீழ் பாலாறு மற்றும் மண்ணாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலத்தினை மாண்புமிகு பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் திறந்து வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட ஆவாரங்குப்பம் பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளதை மாண்புமிகு பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்க நிகழ்வினை 29.08.2024 அன்று மேற்கொண்டார்.


இந்நிகழ்வில் மாண்புமிகு பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தெரிவித்தாவது: பொதுவாக தமிழ் நாட்டில் ஆளுகின்ற ஆட்சிக்கு பெயர் திராவிட மாடல் ஆட்சி இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு என்ன பொருள் என்று சொன்னால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கணும் அது தான் திராவிட மாடல் ஆட்சியின் தாரக மந்திரம். நகரப் பகுதிகளில் எல்லாம் பாலம் அமைத்துக் கொண்டு, கிராமங்களில் எல்லாம் கடைசி வரைக்கும் கிராமமாகவே இருந்து விட கூடாது என்று திராவிட மாடல் ஆட்சியில் இருக்கின்ற முதலமைச்சர் எண்ணுகிற காரணத்தினால் தான் தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் தரைப்பாலங்கள் 1,281 தமிழ்நாட்டில் உள்ளது. 


முதலமைச்சர் சொன்னார் இது போன்ற தரைப்பாலங்கள் கிராமப் பகுதிகளில் அமைவதினால் வெள்ள காலங்களில் ஒரு ஊரிலிருந்து ஒரு ஊருக்கு போக முடியவில்லை. ஒரு பகுதியில் இருந்து ஒரு பகுதிக்கு போகாத காரணத்தினால் விவசாயம் கெட்டுப் போகிறது. உப்பிட்டு செய்கிற பொருட்கள் உரிய இடத்திற்கு சந்தை படுத்த போக முடியவில்லை. அன்றாடம் படித்துக் கொண்டிருக்கிற பிள்ளைகள் கூட பள்ளிக்கூடங்களுக்கு போக முடியாது. எனவே, தரைப்பாலங்கள் என்பது பெரும்பாலும் கிராம பகுதியில் தான் இருக்கும். 


ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊரை இணைக்கிற பகுதியாகவும், ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதியை இணைக்கிற பகுதியாக தான் தரைப்பாலம் அமைந்தது. ஏறத்தாழ பிரிட்டிஷ்காரன் காலத்திலிருந்து ஆட்சிக்கு வரும்போது எல்லாம் அந்தந்த பகுதியில் இருக்க விவசாய பெருங்குடி மக்கள் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிற வர்த்தக பெருமக்கள் பெரும்பான்மையாக ஆட்சிக்கு வருகின்ற அமைச்சர்களிடைத்திலேயே மனு கொடுப்பார்கள். வெள்ள காலங்களில் எங்களால் போகவே முடியவில்லை. வெள்ள காலங்களில் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் மாணவர்கள் வெள்ளத்தில் அடித்து சென்று விட்டனர் என்று எல்லாம் பத்திரிக்கைகளில் செய்தி வந்தது. 


வெள்ளக் காலங்களில் இப்படி தரைப்பாலத்தின் மூலமாக உயிர் போன வரலாறும் உண்டு. தென்பெண்ணையாறு, பாலாற்றில் வெள்ளம் போகும் போது கொப்பரை பயன்படுத்திக்கொண்டு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வார்கள். கொப்பரை மிகவும் ஆபத்தானது. அப்படிப்பட்ட அந்த கொப்பரையின் மூலமாக இந்த பகுதியில் இருந்து அந்த பகுதிக்கு செல்வார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரைமட்ட பாலங்கள் எல்லாம் உயர்மட்ட பாலமாக மாற்ற வேண்டுமென எங்கள் துறைக்கு ஆணையிட்டார். 


ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்தார். நிதி ஒதுக்கப்பட்ட காரணத்தினால் தமிழ்நாட்டில் 1,281 தரைப்பாலங்கள் கண்டறியப்பட்டது. கண்டறியப்பட்டு இந்த மூன்று ஆண்டுகளிலேயே 906 பாலங்கள் உயர் மட்ட பாலமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்டுள்ள அந்த பாலங்களில் தான் நம்முடைய திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 மூன்று பாலங்களையும் கட்டுகின்ற ஒரு நிகழ்வை நெடுஞ்சாலை துறையின் மூலம் ஏற்பாடு செய்ததற்காக நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் உட்பட அந்த துறையில் பணியாற்றுபவர்களுக்கு என்னுடைய பாராட்டுதல்களை தெரிவிக்க விரும்புகின்றேன். 


அதற்கு காரணம் ஒப்பந்ததாரர்களிடையே சொல்லி குறிப்பிட்ட காலங்களிலேயே கட்டி முடித்து விட்டார்கள். சில பாலங்கள் டெண்டர் விடும் போது உதாரணமாக திருப்பத்தூர் மாவட்டத்திலேயே 13 ஆண்டுகள் கிடப்பில் உள்ள பாலத்தை கண்டறிந்து, எதற்கு அந்த இரயில்வே பாலம் கட்டி முடிக்கவில்லை என்று கேட்டபொழுது நிலம் கையகப்படுத்தவில்லை என்று சொன்னார்கள். பாலங்கள் கட்ட வேண்டுமென்றால் நிலங்களை கையப்படுத்திய பிறகு தான் திட்டங்கள் தீட்டப்பட்டு, ஒப்பந்தாரர்கள் அமைக்கப்பட்டு பாலங்கள் கட்ட வேண்டும். நான் அமைச்சராக பொறுப்பேற்ற உடன் அதற்காக நிதி ஒதுக்கீடு செய்து இரயில்வே பால பணிகள் கட்டி கொண்டிருக்கிறோம். 


அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட தரைப்பாலங்கள் உள்ளது. அதில் 23 பாலங்களை முடித்திருக்கிறோம். அந்த பாலங்களில் இந்த 3 பாலங்கள் 1 ஆவாரங்குப்பம் - நாராயணபுரம் சாலையில் மதிப்பீடு 18.40 கோடி மதிப்பீடும், 2.அப்துல்லாபுரம் - ஆசானம்பட்டு திருப்பத்தூர் சாலையில் 1.60 கோடி மதிப்பீடும், 2.பச்சூர்- கொளத்தூர் சாலையில் உள்ள ஆந்திரபிரதேச சாலையை இணைக்கின்ற ஒரு 1.00 கோடி மதிப்பீட்டில் தரைபாலத்தை உயர்மட்ட பாலாமாக திராவிட மாடல் ஆட்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கட்டி தந்திருக்கிறார்கள், மழைக்காலங்களில் இப்பகுதியில் 1.5 மீட்டர் தண்ணீர் மேலே வரும். 


எப்படி பயணிக்க முடியும். அதனை அறிந்து இந்த பாலத்தை கட்டுகின்ற நிலை ஏற்பட்டது. இந்த பாலம் கட்டுவதன் மூலமாக ஏறத்தாழ 28 கிராமங்கள் பயனடைய உள்ளனர். ஆவாரங்குப்பம், திம்மாம்பேட்டை, நாராயணபுரம், அசந்தபுரம், தும்பேரி, மூலகொல்லை, தங்கமான் வட்டம், புல்லூர், ராமநாயக்கன் பேட்டை, தெக்குப்பட்டு, மல்லக்கொண்டா, ஜொல்லகவுண்டனூர், தளுகன் வட்டம், வடுகமுத்தம்பட்டி, குரிசிலாப்பட்டு, பள்ளத்தூர், பள்ளவள்ளி, பெருமாப்பட்டு, பச்சூர், கொத்தூர்குப்பம், மல்லப்பள்ளி, வெல்லக்கல் நத்தம், நாட்றம்பள்ளி, பந்தாரப்பள்ளி, தோப்லகுண்டா ஆகிய கிராமங்கள் எல்லாம் இதன் மூலம் பயனடைய வாய்ப்புள்ளது. 


இப்படி பயனுள்ள காரியத்தை நம்முடைய ஆட்சியில் செய்துள்ளனர். மக்களுடைய பயன்பாட்டிற்கு பாலம் என்பது முக்கியமானது. அதனடிப்படையில் தான் இப்போது இரயில்வே பாலமும் நாம் கட்டிக்கொண்டிருக்கிறோம். 51 கோடி மதிப்பீட்டில் குடியான்குப்பம் பந்தாரப்பள்ளி 2 இடத்தில் இரயில்வே மேம்பாலத்தை கட்டி கொண்டிருக்கின்றோம். அம்பலூர்- எக்ஸலாபுரம் சாலை குறுக்கே 27 கோடி ரூபாயில் இரயில்வே பாலமும் இந்த மாவட்டத்தில் கட்டிக்கொண்டு இருக்கிறோம். 


திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த மூன்று ஆண்டுகளில் 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 188 கி.மீ சாலைகள் செப்பனிடப்பட்டுள்ளது. ஆக 23 பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கோடி, கோடியாக ஒதுக்கின்ற காரணத்தினால் தான் இது போன்ற பணிகள் நடைபெறுகின்றது. அதே போன்று நபார்டு கிராம சாலைகள் திட்டம் மூலமாக 94 கோடி ரூபாய் முதலீட்டில் 32 கி.மீ நீளத்திற்கு 14 ஊராட்சிகளில் இரண்டு பால பணிகளும் நடந்துக் கொண்டு வருகிறது. 


மக்களுக்கு தேவையான எந்த திட்டமாக இருந்தாலும் இந்த அரசாங்கம் வாயிலாக மக்களுக்கு வேகமாக கொண்டு செல்ல வேண்டுமென்று இந்நிகழ்வில் மாண்புமிகு பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.


இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., தலைமை வகித்தார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை  ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி அவர்கள், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி அவர்கள், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர். சூரிய குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 


தலைமைப் பொறியாளர் நபார்டு மற்றும் கிராம சாலைகள் ஜெ.தேவராஜி அவர்கள் வரவேற்பு நல்கினார், நெடுஞ்சாலை துறை சார்ந்த கண்காணிப்பு பொறியாளர், கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!