காரைக்கால் ஸ்ரீ சிவலோகநாத சுவாமி கோவில் விதைத்தெளி உற்சவம்.
காரைக்கால் அடுத்த தலத்தெரு அமைந்துள்ள ஸ்ரீசிவலோகநாத சுவாமி தேவஸ்தானத்தில் நடைபெற்ற விதைத்தெளி உற்சவத்தில் பக்தர்கள் ஆலய நந்தவனத்தில் விதை தெளித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் மாவட்டம் திருத்தெளிச்சேரி எனும் தலத்தெருவில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீசிவலோகநாத சுவாமி தேவஸ்தான ஆலயத்தில் முன்னொரு காலத்தில் மழை இல்லாமல் உணவு பயிர்கள் விளைச்சலின்றி பஞ்சம் ஏற்பட்ட நிலையில் ஊர் மக்கள் இவ்வாலயத்தின் இறைவனிடம் முறையிட்டனர்.
மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக சிவனே ஏர்கலப்பை ஏந்தி இங்கு வந்து விதைத் தெளித்து விவசாயம் செய்ததாக புராணங்களில் உள்ளது. அதனை நினைவில் கொள்ளும் விதமாக ஆண்டு தோறும் விதைத்தெளி உற்சவம் நடைபெற்றது வழக்கம்.
இந்த ஆண்டு விதைத்தெளி உற்சவம் நேற்று ஏகாதச ருத்ர ஹோமத்துடன் துவங்கியது. இன்று காலை ஸ்ரீசிவலோகநாத சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விதை நெல்லை எடுத்து வந்து ஆலய நந்தவனம் முன்பு உள்ள நாகராஜ கணபதி சன்னிதியில் வைத்து பூஜித்த பின் விதை நெல்லுடன் ஆலய பிரகாரத்தை வலம் வந்து ஆலய நந்தவனத்தில் விதைத்தெளி உற்சவம் நடைபெற்றது.
தொடர்ந்து சிவலோகநாதசுவாமி மற்றும் அம்பாளுக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
No comments