விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தயாராகும் பலவித விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரம்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியை உற்சாகமாக கொண்டாடுவதற்கு பொதுமக்கள் காத்திருக்கும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அரும்பாக்கத்தில் சில குடும்பங்கள் பாரம்பரிய தொழிலாக விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரும்பாக்கத்தில் உள்ள முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் குடும்பத் தொழிலாக மண்பாண்டம் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இவர் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். கிழங்கு மாவு, காகித கூழ் கொண்டு சுமார் மூன்று அடி முதல் 10 அடி வரையிலான பலவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது.
இதில் சிங்கவாகன விநாயகர், யானை வாகன விநாயகர், மயில் வாகன விநாயகர், மான் வாகன விநாயகர், காலை வாகன விநாயகர், நவீன யுக்திகளோடு கொண்ட விநாயகர் சிலைகளும் தயாரிக்கப்படுகிறது. அவற்றிற்கு இயற்கை முறையில் வாட்டர் கலர் பயன்படுத்தப்படுகிறது.
முருகன் தனது குடும்பத்தோடு கடந்த இரண்டு மாதங்களாக விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் சிறிய வகையிலான சுமார் ஐந்து இன்ச் முதல் இரண்டரை அடி வரையிலான விநாயகர் சிலைகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
விநாயகர் சிலைகள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளுக்கு அனுப்புவதற்கு தயாராகி வருகிறது. விநாயகர் சிலைகள் பல வண்ணங்களில் பல வகைகளில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments